வேளாண் மதிப்பு கூட்டு மையம் அமைக்க மானியம் பெற அழைப்பு
வேளாண் மதிப்பு கூட்டு மையம் அமைக்க மானியம் பெற அழைப்பு
வேளாண் மதிப்பு கூட்டு மையம் அமைக்க மானியம் பெற அழைப்பு
ADDED : செப் 11, 2025 01:53 AM
சென்னை:'வேளாண் மதிப்புகூட்டு மையங்கள் அமைக்க, 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்' என, வேளாண்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண் பொருட்களை பதப் படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற தொழில்களை துவங்க முன்வரும், தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிறப்பு திட்டம் செயல் படுத்த, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, 10 கோடி ரூபாய் வரையிலான, புதிய மதிப்பு கூட்டுதல் திட்டங்களுக்கு, முதலீட்டு மானியமாக 25 சதவீதம்; பெண்கள், தொழில் வளர்ச்சியில், பின் தங்கியுள்ள வட்டாரங்களில் துவக்கப்படும் தொழில்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, கூடுதலாக 10 சதவீதம் என, மொத்தம் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
அனைத்து பிரிவினருக்கும், 5 சதவீத வட்டி மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில், பயனாளிகள் பங்களிப்பு, குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும்.
மீதமுள்ள தொகை, வங்கி கடனாக பெறப்பட வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள, வேளாண் தொழில் முனைவோர், விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வங்கியின் கடன் ஒப்புதல் பெற வேண்டும்.
பின்னர் மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட தொழில்நுட்ப குழு மற்றும் மாநில அளவிலான, திட்ட ஒப்புதல் குழுவால், மதிப்பாய்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோருக்கு, தொழில் திட்டத்திற்கு ஏற்ப, மானிய தொகை அதிகபட்சமாக, 1.50 கோடி ரூபாய் வழங்கப்படும். ஐந்து ஆண்டு களுக்கு, 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.