போலீஸ் விசாரணைக்கு ஆஜராக பா.ஜ., தலைவர் எச்.ராஜாவுக்கு உத்தரவு
போலீஸ் விசாரணைக்கு ஆஜராக பா.ஜ., தலைவர் எச்.ராஜாவுக்கு உத்தரவு
போலீஸ் விசாரணைக்கு ஆஜராக பா.ஜ., தலைவர் எச்.ராஜாவுக்கு உத்தரவு
ADDED : ஜூன் 24, 2025 05:44 AM

சென்னை : மத மோதலை துாண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, காவல் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, ஹிந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு, காவல் துறை அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து, ஹிந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியது; 'வெறுப்புணர்வு, கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசக்கூடாது' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மீது, மத மோதலுக்கு துாண்டுதலாக இருந்தது; நீதிமன்ற நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணைக்கு வருமாறு, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எச்.ராஜா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ''காவல் துறை விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போலீஸ் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர, மனுதாரருக்கு அதிகாரம் இல்லை,'' என, உத்தரவிட்டுள்ளார்.