பக்ரீத் ஸ்பெஷல் : மிதம் பதம் மோட்சம்
பக்ரீத் ஸ்பெஷல் : மிதம் பதம் மோட்சம்
பக்ரீத் ஸ்பெஷல் : மிதம் பதம் மோட்சம்
ADDED : ஜூன் 06, 2025 07:11 PM
மொபைல் போன் சிணுங்கியது... எடுத்து காதில் இணைத்தாள் நஸ்ரத் ரோஸி. வயது 22; உயரம் 160 செ.மீ., ரோஜா குல்கந்து தோற்றம். நீண்ட கூந்தல். சுருமா ஈஷிய கண்கள். மூக்கில் பொட்டுக்கடலை வடிவ மூக்குத்தி. முதுகலை தத்துவவியல் மற்றும் மதங்கள் முதலாமாண்டு படிப்பவள்.
இரு முனைகளிலும் அழகிய முகமன் பரிமாற்றம்.
“நான் தவ்பத்துன் நஸுஹாவின் அம்மா பேசுகிறேன்!”
“சொல்லுங்கம்மா... நல்லாயிருக்கீங்களா?”
“நல்லாயிருக்கேன்னு சொல்லதான் ஆசை. ஆனா உண்மையில் நாங்கள் ராகத்தா இல்லை!”
“என்னம்மா பிரச்னை?”
“நீயும் என் மகளும் எல்.கே.ஜி.,யிலிருந்து பிளஸ் 2 வரை ஒன்றாக படித்தீர்கள். அதன்பின் என் மகள் தவ்பத்துன் ஆலிமா பட்டம் பெற மூன்று வருடம் படித்தாள். மதரஸா படிப்பை முடித்து நுாரியா பட்டம் பெற்றாள். அதன்பின் கடந்த ஒன்றரை வருடங்களாக அவளது தினசரி நடவடிக்கைகள் விசித்திரமாக மாறிவிட்டன.”
“என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாள்?”
“அதை நான் என் வாயால் எப்படிச் சொல்வேன்? நீயே வந்து நேரில் பார்... அவளுக்கு தேவைப்படும் அறிவுரைகளை கூறு!”
“அரைமணி நேரத்தில் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்!”
மொபைல் போனை கோமா நிலைக்கு ஆழ்த்தினாள் ரோஸி.
ரோஸியின் அம்மாவழி பாட்டி ரூஹினா காத்துான் முன் வந்தாள். “என்ன நஸ்ரத் போன்?”
பேசியதை விவரித்தாள் நஸ்ரத் ரோஸி.
“நீயும் நானும் போய் உன் தோழி தவ்பத்துனை பார்ப்போம்!”
பாட்டியும் பேத்தியும் ஸ்கூட்டி பெப்பில் பறந்தனர். தவ்பத்துனின் வீட்டு வாசலில் வாகனத்தை நிறுத்தி ஸ்டாண்டிட்டாள் ரோஸி.
வீட்டுக்குள் இருவரும் பிரவேசித்தனர்.
வீடு முழுக்க வாசனை பத்தி சாம்பிராணி புகை கமழ்ந்தது.
தவ்பத்துன் நஸுஹா, அணிந்திருந்த சேலையின் முந்தானையை தலையில் போர்த்தி, இரு கால்களை பின்னுக்கு எக்ஸ் வடிவில் மடித்து, அதன் மீது அமர்ந்திருந்தாள்.
பதினெட்டு மாதங்களுக்கு பின் தவ்பத்துனை ரோஸி பார்க்கிறாள். தவ்பத்துன் 15 கிலோ எடை குறைந்திருக்கிறாள்.
மீண்டும் அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“என்னுயிர் தோழி தவ்பத்துனே... நல்லாயிருக்கியா?”
“அல்லாஹ்வின் பேரருளால் நன்றாக இருக்கிறேன். நான் தவ்பத்துன் கிடையாது; நான் சின்ன நானா அஸ்மாவு; நான் சின்ன ராபியா அல் பஸ்ரி; நான் இருபத்தியோராம் நுாற்றாண்டு நவீன பெண் சூபி!”
தவ்பத்துனின் அம்மா குறுக்கிட்டாள்.
“அம்மா! என் மகள் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து நோன்பு நோற்கிறாள். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தான் துாங்குகிறாள். மீதி நேரமெல்லாம் தொழுகிறாள் குர்ஆன் ஓதுகிறாள்; திக்ர் எடுக்கிறாள். கை,கால், கழுத்தில் இருந்த நகைகளை கழற்றி விற்று ஜக்காத் கொடுக்கிறாள். திருமணமே செய்து கொள்ளாது முழுமையாக ஆன்மிகத்தில் மூழ்கித் திளைக்கப் போகிறாளாம்... தப்ஸ் அடித்துக் கொண்டு உலகம் முழுதும் மிஸ்கீனாக சுற்றித்திரிய போகிறாளாம். நடந்தே ஹஜ் யாத்திரை நிறைவேற்றப் போகிறாளாம்!”
தவ்பத்துன் நாகூர் இ.எம். அனீபாவின் கனத்த குரலில் குணங்குடி மஸ்தானின் பாடலை பாட ஆரம்பித்தாள்.
“நாடாத பேர்கள் பயம்பயம் பயமென்ன
நம்பிய பேர்கள் ஜெயம்ஜெயம் ஜெயமென்ன
தேடிய பேர்கள் நயம் நயம் நயமென்ன
திக்குத் திசைகளெங்கு மிக்கவொளி பரப்பி
ஒக்க உலகமொரு கைக்குள் அடங்கும்
நம் பரமமுதன் குணங்குடி”
நஸ்ரத் ரோஸி தோழியின் பக்கத்தில் அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டு அவளது வலது கையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள்.
“மார்க்கத்துக்கு உட்பட்டு பொதுக்கல்வி படித்து நல்ல வேலைக்கு போய் சொந்தக்காலில் நிற்க உனக்கு பிரியமில்லையா?”
“எனக்கு இம்மை முக்கியமில்லை மறுமைதான் முக்கியம்!”
“இம்மையிலும் நேரிய வழிகளில் செயல்பட்டு வெற்றி பெறு; மறுமையிலும் வெற்றி பெறு!”
“எனக்கு மறுமை போதும்!”
“நீ இஸ்லாமுக்கும் நபிவழிக்கும் முரணாக நடக்கிறாய் தவ்பத்துன்!”
“எதை வைத்து சொல்கிறாய்?”
“ஓ மக்களே! உங்கள் சக்திக்கு உட்பட்டதையே செய்து வாருங்கள். ஏனெனில் நிச்சயமாக அமல்களில் சிறந்தது கொஞ்சமாக இருந்தாலும் நிரந்தரமாக செய்து வருவதே ஆகும்' என நபிகள் நாயகம் கூறி இருக்கிறார். 'உண்ணுங்கள்; உறங்குங்கள்; தொழுங்கள்; நோன்பும் வையுங்கள்; உலக நடவடிக்கைகளிலும் ஈடுபடுங்கள்' என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. ஆயுள் முழுக்க தொழ சொல்லவில்லை, ஆயுள் முழுக்க நோன்பு வைக்க சொல்லவில்லை மார்க்கம்...”
கண்களை அகட்டினாள் தவ்பத்துன்.
“திருமணம் செய்து கொள்ளக்கூடாது என எது உன்னை தடுக்கிறது? உன் அறியாமை தான். திருமணம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஈமானில் பாதி!”
“திருமணம் செய்து கொண்டால், கணவன், குழந்தைகள் என சிறு வட்டத்துக்குள் சுருங்கி விடுவேன்!”
“சவால்களும், கடமைகளும் இல்லாத வாழ்க்கை சுவைக்காது!”
“என்னை திசை திருப்புகிறாய் ரோஸி!”
“நல்வழிப்படுத்துகிறேன். நீ, 75 வருடம் உயிர் வாழ்கிறாய் என்றால் அதில் 25 வருடங்கள் துாங்கியே கழிக்கிறாய், ஒரு நாளைய, 1440 நிமிடங்களில் 17 ரக்காயத்துக்ளை மொத்தம் முப்பதே நிமிடங்களில் தொழுது கொள்ளலாம். விருப்பப்பட்டால் உபரியாக 12 ரக்காயத்துகள் தொழுகை தொழலாம்.
வருடத்தில் கட்டாயம் 30 நோன்பும், விரும்பினால் ஆறு நோன்பும் நோற்கலாம். திக்ர் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் போதும். நீ சுயமாய் சம்பாதிக்கும் போது, ஜக்காத் கொடுத்துக் கொள்ளலாம். ஹஜ்ஜை நடந்து நிறைவேற்ற மார்க்க கட்டாயமில்லை!”
“நான் சூபியாக வேண்டாமா?”
“அருமைத் தோழியே! இவ்வுலக வாழ்க்கைக்கு இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கேள்வித்தாள் கொடுத்துள்ளான்.
அதற்கான பதிலை எழுது. பக்கத்து கேள்வித்தாளுக்கு பதில் எழுதாதே. தினசரி வாழ்க்கையில் நியாயமான சந்தோஷங்களை அனுபவித்துக் கொண்டு அதே நேரத்தில் சூபியில் மூழ்கி நீந்த உன்னை எது தடுக்கிறது?
தொழுகையை நடத்திய நபிதோழர் ஒருவர் தொழுகை நேரத்தை நீட்டித்ததற்கு, சபித்திருக்கிறார் நபிகள் நாயகம். எவ்வித சிரமங்களுக்குள்ளாகாமல் 'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' அல்லது 'சுப்ஹானல்லாஹில் அழீம்' கூறுதலே நன்மை பயக்கும்!”
“மொத்தத்தில் என்னதான் கூறுகிறாய் ரோஸி?”
ரோஸியின் பாட்டி ரூஹினா காத்துான் குறுக்கிட்டாள். “பொதுவாக ஒரு கருத்தை கூறுகிறேன் தவ்பத்துன். வாழ்வின் எல்லா காரியங்களிலும் மிதமாய் இரு. மூன்றில் ஒருபங்கு இரைப்பை அளவு உண், அளவாக துாங்கு, நட்பில் தேனாய் இராதே வேம்பாகவும் இராதே, மத்திமமாய் இரு. புகழ், பதவி, அதிகாரம், தாம்பத்யம் மற்றும் ஆன்மிகத்தில் மிதமாக இயங்கு. ஆனால் தொடர்ச்சியாக இயங்கு. மகள், சகோதரி, மனைவி, தாய், தாதி இப்படி எல்லா உறவுகளிலும் கண்ணியமாக செயலாற்று. “வாழ்நாளில் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் மொத்தத்தையும் ஒரே நொடியில் சுவாசிக்க இயலாது. ஒட்டகத்தில் சவாரி செய், ஒட்டகத்தை துாக்கி சுமக்க முயலாதே! எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்!”
தெளிந்தாள் தவ்பத்துன் நஸுஹா நுாரிய்யா. “புரிந்து கொண்டேன் மிதம் பதம் மோட்சம்!”
கொண்டு வந்த அஜ்வா பேரீச்சம்பழத்தை, நஸ்ரத், ரோஸி தோழிக்கு ஊட்டினாள். அறுசுவைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட பதார்த்தங்களின் சிறு துணுக்குகளை தவ்பத்துனின் நாக்கில் தடவினாள்.
“தொடர்ந்து பொதுக்கல்வி படி தவ்பத்துன்!”
“இளங்கலை செவிலியர் படித்து செவிலியர் நங்கை ஆவேன். ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்வேன்!”
“ஆன்மிக அமிர்தத்தை அளவாக பருகி மனிதம் கொண்டாடுவோம்!” என்றாள் நஸ்ரத் ரோஸி.
- ஆர்னிகா நாசர்