Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்

த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்

த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்

த.வெ.க., நிர்வாகிகளை தாக்குவதா? தி.மு.க.,வுக்கு சீமான் கடும் கண்டனம்

Latest Tamil News
சென்னை: த.வெ.க., நிர்வாகிகளை போலீசார் தாக்கியதற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய த.வெ.க., பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழக போலீசார் கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம். குடிசைகளை இழந்த மக்களுக்கு உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும், உணவும் வழங்கியதை போலீசார் தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

எதேச்சதிகாரம்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா? அதற்காக தி.மு.க., அரசு போலீசாரை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். ஜனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே?

அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை அனைவருமே மக்களுக்கு தொண்டு செய்யும் சேவர்கள்தான் எனும் போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததை தடுத்து நிறுத்தி தி.மு.க., அரசின் போலீசார் தாக்கியது ஏன்?

இதுதான் திராவிட மாடலா?

பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை? இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான் தி.மு.க., பெற்றுத்தந்த சமூக நீதியா?

கடும் நடவடிக்கை

தி.மு.க., அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆகவே, த.வெ.க பெண் நிர்வாகிகளை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us