தி.மு.க., தொண்டர்களே அக்கட்சியை தோற்கடிப்பர் மதுரையில் அண்ணாமலை பேச்சு
தி.மு.க., தொண்டர்களே அக்கட்சியை தோற்கடிப்பர் மதுரையில் அண்ணாமலை பேச்சு
தி.மு.க., தொண்டர்களே அக்கட்சியை தோற்கடிப்பர் மதுரையில் அண்ணாமலை பேச்சு
ADDED : பிப் 25, 2024 02:34 AM

மதுரை:''தி.மு.க., தொண்டர்களே பிரதமர் மோடிக்குத் தான் ஓட்டுப் போடுவர். தி.மு.க.,வை அக்கட்சி தொண்டர்களே தோற்கடிப்பர்,'' என, மதுரையில் பா.ஜ., சார்பில் நடந்த 'என் மண்; என் மக்கள்' யாத்திரையில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை பேசினார்.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் நடந்த யாத்திரையில் அண்ணாமலை பேசியதாவது:
மதுரை எனில் வீரம், அதிரடி, அரசியலில் திருப்புமுனைக்கு பெயர் போனது. இங்கு புதுக்கட்சியை துவக்குவர். அரசியல் மாற்றத்திற்கான மண். ஒரு கட்சியை முடிவுக்கு கொண்டு வருவதை இங்கு துவக்குகிறோம்.
சவால்
இதுபோல, 228 சட்டசபை தொகுதிகளில் யாத்திரை நடந்துள்ளது. பிப்., 27ல் பல்லடத்தில் முடிகிறது. இது சாதாரண வேள்வி இல்லை. திராவிட அரசியலை வேரோடும், மண்ணோடும் சாய்க்கும் வாய்ப்பாக இந்த யாத்திரையை பயன்படுத்தி உள்ளோம். லோக்சபா தேர்தல் முடிவுகளும் அதற்கேற்ப இருக்கும்.
மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தான் வெற்றி பெறுவார் என தெரிந்தே நடக்கும் தேர்தல் இது. வரலாற்றில் இது முதல்முறை. தமிழக அரசியல் சுத்தம் செய்யப்படும். குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி அகற்றப்படும்.
மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த பெருமை பாண்டித்துரை தேவருக்கு உண்டு. ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை உலகிற்கு கொண்டு சென்றவர் மோடி. ஐ.நா.,வில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார்.
திருக்குறள், 39 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
சவுராஷ்டிரா மக்கள் 1,300 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தனர். அவர்களை தமிழ்ச் சங்கமம் மூலம் சவுராஷ்டிராவிற்கு அழைத்துச் சென்றுவர ஏற்பாடு செய்தவர் மோடி.
பொருளாதாரத்தில் உ.பி., இரண்டாவது இடம், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளன. ஓர் ஆட்சி எப்படி நடக்கக்கூடாதோ அதை தி.மு.க., செய்கிறது. தமிழகம், 8 லட்சத்து 30,000 கோடி கடனில் உள்ளது.
சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம், கல்விக்கடன், நகைக்கடன் தள்ளுபடி, அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அளித்திருந்தார். அதை நிறைவேற்றவில்லை.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது பா.ஜ., அளித்த 295 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சவால் விடுகிறேன். நிறைவேற்றவில்லை என தி.மு.க., கூறினால் நான் அரசியலை விட்டு விலகி, மீண்டும் விவசாயம் பார்க்க சென்று விடுவேன்.
ஸ்டிக்கர் ஒட்டுகிற கட்சி
தி.மு.க., தொண்டர்களே மோடிக்கு தான் ஓட்டு போடுவர். தி.மு.க.,வை அக்கட்சி தொண்டர்களே தோற்கடிப்பர்.
தி.மு.க., பைல்ஸ் விரைவில் வெளிவரும். அமைச்சர் தியாகராஜன் ஒரு மணி நேரம் 8 நிமிடம் போனில் பேசிய ஆடியோ பதிவை கேட்டால் மொத்த கோபாலபுரமும் சிக்கும்.
என்னை பூச்சாண்டி என பங்காளி கட்சியினர் - அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். முன்னாள் முதல்வர் பழனிசாமி நெற்றியிலிருந்த விபூதியை அழித்துவிட்டு, எஸ்.டி.பி.ஐ., மாநாட்டில் பங்கேற்றார்.
மதுரை எம்.பி., வெங்கடேசன் எந்த வேலையும் செய்யவில்லை. தி.மு.க.,விற்கு ஸ்டிக்கர் ஒட்டுகிற கட்சிமார்க்சிஸ்ட்.
இவ்வாறு அவர் பேசினார்.