ADDED : செப் 22, 2025 12:09 AM

திருப்பூர்; ''பா.ஜ.வில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புறக்கணிக்கப்படவில்லை; அவர் முக்கியமான தலைவர்'' என்று பா.ஜ. மாநில துணைத்தலைவர் கனகசபாபதி கூறினார்.
திருப்பூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டை உற்பத்தி மையமாக்குவதே பிரதமர் மோடியின் நோக்கம். 'இந்தியாவிலே தயாரிப்போம்' பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இது இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்காக மோடி கடினமாக உழைத்து வருகிறார்.
அமெரிக்க வரி விதிப்பு என்பது வெகு காலம் நீடிக்காது. வர்த்தக பேச்சு துவங்க உள்ளது. இரண்டு மாதத்தில் கூடுதல் வரி இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி உள்ளனர். அந்நாட்டு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சில வாரங்களில் இப்பிரச்னைக்கு தீர்வு வந்து விடும். இன்னொரு நாட்டுக்கு, நாம் அடிபணிய தேவையில்லை.
பா.ஜ.வை பொறுத்தவரை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் மாற்றம் இருக்கும். பா.ஜ., மாநில தலைவராக, இதுவரை பல தலைவர்கள் இருந்துள்ளனர். தலைவர்கள் மாற்றம் என்பது இயற்கை. அண்ணாமலை புறக்கணிக்கப்படவில்லை. அவர் முக்கியமான தலைவர்.
ஓட்டு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் கூறுவது முழுக்க பொய். ஜோக்கர் மாதிரி, ராகுல் நினைத்ததை எல்லாம் பேசி வருகிறார்.
விஜய்க்கு கூட்டம் வருகிறது. கூட்டம் வருவதை வைத்து ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. கோவைக்கு வந்த நடிகர் தனுஷூக்கு கூட, நிறைய கூட்டம் வந்தது.இவ்வாறு, அவர் கூறினார்.