ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: பழனிசாமி உறுதி
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: பழனிசாமி உறுதி
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: பழனிசாமி உறுதி
ADDED : செப் 14, 2025 05:14 AM

சூலுார்: ''அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி சூலூரில் பேசினார்.
அ.தி.முக., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று சூலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:
தி.மு.க. அரசால், சொத்து வரி மற்றும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் மின் கட்டணம், நிலைக்கட்டணம் உயர்த்தப்படுவதால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. கூலி உயர்வு கேட்டு போராடிய விசைத்தறியாளர்களின் கோரிக்கையை சட்டசபையில் பேசி, தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தோம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆனை மலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரு மாநில அரசு சார்பில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு, கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் அத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். கைத்தறி விசைத்தறி தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சூலூர் தொகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க, புதிய கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். அனைத்து பகுதிகளிலும் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு பழனிசாமி பேசினார். இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ. கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், கந்தவேல், நகர செயலாளர் கார்த்திகை வேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.