கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை அளித்து முக்கிய பங்காற்ற கட்சியினருக்கு அமித் ஷா உத்தரவு
கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை அளித்து முக்கிய பங்காற்ற கட்சியினருக்கு அமித் ஷா உத்தரவு
கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை அளித்து முக்கிய பங்காற்ற கட்சியினருக்கு அமித் ஷா உத்தரவு
ADDED : ஜூன் 13, 2025 02:13 AM

சென்னை: 'உள்ளூரில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் பங்கேற்று நன்கொடை வழங்குவது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ.,வினருக்கு, அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
அதிருப்தி
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகம் ஆன்மிக பூமியாக திகழ்கிறது. அனைத்து ஊர்களிலும் கோவில்கள் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் ஹிந்துக்கள். ஆனால், ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.,வினர், ஹிந்து மதத்தையும், ஹிந்துக்கள் மனம் புண்படும் வகையிலும் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, முதல்வர் பொறுப்பில் உள்ள ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை. மற்ற மதத்தினர் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகிறார்.
இது ஹிந்து மதத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, முருகனின் பெருமைகளை உலகிற்கு தெரிவிக்க, ஹிந்து முன்னணி சார்பில், வரும் 22ம் தேதி, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதில் நாடு முழுதும் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு, பக்தர்களின் காணிக்கையாக வருவாய் கிடைத்தாலும், பெரும்பாலான கோவில்கள் முறையான பராமரிப்பின்றி உள்ளன. இதனால் பக்தர்கள் மனம் புண்படுகிறது. விரைவில் ஆடித்திருவிழா, தமிழகம் முழுதும் உள்ள அம்மன் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
கோவிலுக்கு உதவி செய்வோரின் நன்றியை, மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, ஒவ்வொரு கட்சி நிர்வாகியும், தங்கள் பகுதியில் உள்ள கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்று, உள்ளூர் மக்களுடன் இணைந்து, கோவில்களை புனரமைத்து கொடுக்க, நிதியுதவி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
நன்மதிப்பு
கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை வழங்குவது, அன்னதானம் வழங்குவது, பக்தர்கள் சிரமத்தை போக்குவது என, தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என, பா.ஜ.,வினருக்கு, கட்சியை வழிநடத்தும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார்.
இதன் வாயிலாக, பா.ஜ., மீது மக்களிடம் நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படும். கட்சியினரும், அனைத்து கிராம மக்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்படும். கட்சி தலைமையின் விருப்பத்துக்கு இணங்க, அனைத்து கோவில் திருவிழாக்களிலும் பா.ஜ.,வினர் முக்கிய பங்காற்றுவர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.