/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கிடங்கில் குப்பை சேகரிக்கும் சிறார் எதிர்காலம் கேள்விக்குறி கிடங்கில் குப்பை சேகரிக்கும் சிறார் எதிர்காலம் கேள்விக்குறி
கிடங்கில் குப்பை சேகரிக்கும் சிறார் எதிர்காலம் கேள்விக்குறி
கிடங்கில் குப்பை சேகரிக்கும் சிறார் எதிர்காலம் கேள்விக்குறி
கிடங்கில் குப்பை சேகரிக்கும் சிறார் எதிர்காலம் கேள்விக்குறி
ADDED : ஜூன் 13, 2025 02:13 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், 44 ஏக்கர் பரப்பளவில், அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி மற்றும் காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறிப்பிட்ட ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பை, கடந்த 7 ஆண்டுகளாக, இந்த இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
தற்போது இந்த பகுதியில் மட்கும், மட்காத குப்பை, மலை போல குவிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்கள், குழந்தைகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் குப்பை, இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேகரித்து, தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக, ஐந்து வயது குழந்தைகளில் இருந்து 10 வயதுக்கும் மேற்பட்ட சிறார்கள் பலர் பள்ளிக்குச் செல்லாமல், குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த குப்பைக் கிடங்கில் உள்ள குப்பையை சேகரித்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
சிறார்களும் குப்பை சேகரிப்பு பணியில், எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் நலத்துறை தலையிட்டு, இந்த குழந்தைகளை மீட்டு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.