/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மதுராந்தகம் பஸ் நிலைய கட்டுமான பணி ஜவ்வு ஒப்பந்த காலம் தாண்டியும் முடியாததால் அதிருப்தி மதுராந்தகம் பஸ் நிலைய கட்டுமான பணி ஜவ்வு ஒப்பந்த காலம் தாண்டியும் முடியாததால் அதிருப்தி
மதுராந்தகம் பஸ் நிலைய கட்டுமான பணி ஜவ்வு ஒப்பந்த காலம் தாண்டியும் முடியாததால் அதிருப்தி
மதுராந்தகம் பஸ் நிலைய கட்டுமான பணி ஜவ்வு ஒப்பந்த காலம் தாண்டியும் முடியாததால் அதிருப்தி
மதுராந்தகம் பஸ் நிலைய கட்டுமான பணி ஜவ்வு ஒப்பந்த காலம் தாண்டியும் முடியாததால் அதிருப்தி
ADDED : ஜூன் 13, 2025 02:15 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணியை, விரைந்து முடிக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.செய்யூர், அச்சிறுபாக்கம், வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர்.
இந்த பேருந்து நிலையம் பழமையானதால், மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் காரணமாக, 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலைய கட்டடங்கள், இடித்து அகற்றப்பட்டன.
அத்துடன், மீண்டும் அதே பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள், 2024ம் ஆண்டு, பிப்ரவரியில் பூமி பூஜையுடன் துவங்கின.பழைய பேருந்து நிலையத்தில், வியாபாரிகள் 40 பேர் கடை வைத்து இருந்தனர்.
தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில், 20 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால், நகராட்சிக்கு வருவாய் வரும் வகையில், கூடுதலாக கடைகள் அமைக்க வேண்டும் என, மதுராந்தகம் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர், கலெக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு, தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் முதல் தளம் அமைத்து, 20 கடைகள் அமைப்பதற்காக கூடுதலாக, 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதல் வரப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு, பணிகள் துவக்கப்பட்டன.
ஆனால், ஒப்பந்த காலம் முடிவுற்றும், இன்னும் பணிகள் நிறைவு பெறாமல், மந்தமாக நடைபெற்று வருவதால் பேருந்து பயணியர் மற்றும் வியாபாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.