வேளாண் கட்டமைப்பு வசதி விவசாயிகளுக்கு கடனுதவி
வேளாண் கட்டமைப்பு வசதி விவசாயிகளுக்கு கடனுதவி
வேளாண் கட்டமைப்பு வசதி விவசாயிகளுக்கு கடனுதவி
ADDED : பிப் 06, 2024 02:52 AM
சென்னை: 'வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ், கடன் வசதி பெற்று, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயிர் அறுவடைக்கு பின், விளைபொருட்களை காய வைத்தல், சுத்தம் செய்தல், தரம் பிரித்தல், மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான, வேளாண் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இது கடன் உதவி திட்டம்.
இத்திட்டத்தில், அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, ஏழு ஆண்டுக்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படுகிறது. கடன் தவணைத் தொகையை திருப்பி செலுத்த, விலக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டுகள் உட்பட ஏழு ஆண்டுகளுக்குள் கடன் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.
கட்டமைப்பு வசதிகள்
மின்னணு சந்தையுடன் கூடிய வினியோக தொடர் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள், பழுக்க வைக்கும் அறைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல், போக்குவரத்து வசதிகளுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்த விரிவான தகவல்களை அறியவும், விண்ணப்பிக்கவும், www.agriinfra.dac.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம். மாவட்ட வேளாண் வணிகம் துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட தொழில் மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.