அ.தி.மு.க. கொடி, சின்னம் வழக்கில் பன்னீர்செல்வம் அப்பீல் தள்ளுபடி
அ.தி.மு.க. கொடி, சின்னம் வழக்கில் பன்னீர்செல்வம் அப்பீல் தள்ளுபடி
அ.தி.மு.க. கொடி, சின்னம் வழக்கில் பன்னீர்செல்வம் அப்பீல் தள்ளுபடி
ADDED : ஜன 11, 2024 11:07 PM
சென்னை:அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தக் கூடாது என பொதுச்செயலர் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணை முடியும் வரை பன்னீருக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரியிருந்தார்.
நீதிபதி சதீஷ்குமார் அதை ஏற்று, கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தார். அதை எதிர்த்து பன்னீர்செல்வம் அப்பீல் செய்தார். நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நவம்பர் 30 வரை இடைக்கால தடை விதித்தார் தனி நீதிபதி. பொதுவாக அந்த தேதியில் இந்த வழக்கு அடுத்த கட்ட பரிசீலனைக்காக வந்திருக்கும். இடைக்கால உத்தரவால் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டால், தடையை நீக்க கேட்டிருக்கலாம். அதை செய்யாமல் அப்பீல் போட்டுள்ளார்.
தனி நீதிபதி பிறப்பித்தது இறுதி உத்தரவு அல்ல. இடைக்கால உத்தரவு மட்டுமே. முறையாக பரிசீலிக்காமல் அதை பிறப்பித்து இருந்தால் மட்டுமே நாங்கள் குறுக்கிட முடியும். அப்படி எதுவும் இந்த வழக்கில் இல்லை.
நவம்பர் 30 வரை இடைக்கால தடை என்பதே அவகாசம் தான். எனவே, தங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என பன்னீர் செல்வம் கூறுவதை ஏற்க முடியாது. அவரது அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. தடையை நீக்க தனி நீதிபதியை புது மனுவுடன் அணுகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.