சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை: தி.மு.க., பிரமுகர் கைது
சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை: தி.மு.க., பிரமுகர் கைது
சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் கொலை: தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : ஜூலை 04, 2024 01:49 PM

சேலம்: சேலத்தில் அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, தி.மு.க.,வை சேர்ந்த சதீஷ் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம். இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதியில், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இவர் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். கொலை தொடர்பாக, 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை 04) தி.மு.க.,வை சேர்ந்த சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இ.பி.எஸ்., கண்டனம்
கொலை சம்பவம் தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியில், அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.
தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன், இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.