Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் உண்ணாவிரதம்; அ.தி.மு.க., அறிவிப்பு

மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் உண்ணாவிரதம்; அ.தி.மு.க., அறிவிப்பு

மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் உண்ணாவிரதம்; அ.தி.மு.க., அறிவிப்பு

மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் உண்ணாவிரதம்; அ.தி.மு.க., அறிவிப்பு

ADDED : ஜூன் 18, 2025 11:38 AM


Google News
Latest Tamil News
சென்னை; மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நெல், கரும்பு சாகுபடிகளைத் தொடர்ந்து, அதிக நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்படுவது 'மா' மற்றும் 'தென்னை' ஆகும். சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேரில் 'மா' சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தில், மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட 'மா' விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று விடியா தி.மு.க ஸ்டாலின் மாடல் அரசுக்கு, கிருஷ்ணகிரி கலெக்டர் மூலம் மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.

மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 4 முதல் 5 ரூபாய் மட்டுமே தர முன் வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 'மா' விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாம்பழக் கூழுக்கான GST வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகளைப் போக்கவும், மேலும் அவர்கள் தெரிவித்துள்ள மற்ற கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க தி.மு.க., அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் 20.6.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கிருஷ்ணகிரி பஸ்நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம், கழக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us