சபரிமலை மகரவிளக்கு சீசனுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
சபரிமலை மகரவிளக்கு சீசனுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
சபரிமலை மகரவிளக்கு சீசனுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 01, 2024 06:14 AM
சபரிமலைக்கு மகர விளக்கு சீசனில் திரண்டு வரும் பக்தர்கள் வசதிக்காக, கேரள அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் பஸ்களை இயக்குகிறது.
இப்போக்குவரத்து கழகம் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு, 160 பஸ்களை இயக்குகிறது. இதில், 40 'ஏசி' பஸ்கள் அடக்கம். தொலைதுார சேவைகளுக்கு, 35ல் இருந்து 40 பஸ்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிலக்கல்லுக்கு திரிவேணியில் இருந்தும், வெளியூர்களுக்கு பம்பை பஸ் ஸ்டாண்டில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும். செங்கனுார், திருவனந்தபுரம், எர்ணாகுளம், குமுளி, கோட்டயம், கம்பம், தேனி, பழனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு தொலை துார சர்வீஸ்கள் உண்டு.
இலவசம்
பக்தர்களுக்கு தேவைப்பட்டால், தனியாக ஒப்பந்த பஸ்களும் இயக்கப்படும். குழுவாக வரும் பட்சத்தில் அவர்களுக்கு குரூப் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருவேணியில் இருந்து பம்பை பஸ் ஸ்டாண்டிற்கு பக்தர்கள் இலவசமாக பயணிக்கலாம். பம்பை - சென்னைக்கு நான்கு சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
எருமேலி, குமுளி வழியாக இந்த பஸ்கள் செல்லும். பம்பை - கோவைக்கு நான்கு பஸ்கள் இயங்குகின்றன. எருமேலி காஞ்சிரப்பள்ளி, ஈராற்று பேட்டை, அங்கமாலி, திருச்சூர், வடக்காஞ்சேரி, பாலக்காடு வழியாக இந்த பஸ்கள் செல்லும்.
கன்னியாகுமரிக்கு ஆறு பஸ்கள் பத்தனந்திட்டை, திருவனந்தபுரம், களியக்காவிளை வழியாக செல்லும். மதுரைக்கு நான்கு பாஸ்ட், இரண்டு சூப்பர் பாஸ்ட் பஸ்கள் எருமேலி, குமுளி, கம்பம் வழியாக இயக்கப்படுகின்றன.
பழனிக்கு எட்டு பஸ்கள் எருமேலி, குமுளி வழியாக செல்லும். தேனிக்கு, எருமேலி, குமுளி, கம்பம் வழியாக ஐந்து பஸ்கள் உண்டு.
பம்பை - தென்காசிக்கு, 15 பஸ்கள் புனலுார், செங்கோட்டை வழியாக செல்லும். இதற்கிடையில் மகர ஜோதி தெரியும் ஜன., 15 மற்றும் அதற்கு முந்தைய நாளான ஜன., 14க்கான முன்பதிவு நேற்று காலை துவங்கியது.
கூடுதல் போலீசார்
சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு பணிக்காக ஐந்தாம் கட்டமாக, 1,600 போலீசார் பொறுப்பேற்றுள்ளனர். இது மண்டல காலத்தை விட, 400 பேர் அதிகமாகும்.
இதில், 10 டி.எஸ்.பி.,க்கள், 33 இன்ஸ்பெக்டர், 96 எஸ்.ஐ., மற்றும் 1,424 போலீசார் உள்ளனர். வரும் நாட்களில் கூட்டம் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணிகளை முன்னதாகவே செய்து வருகின்றனர்.
--- நமது நிருபர் --