அயலக தமிழர் தின விழா இன்று துவக்கம்
அயலக தமிழர் தின விழா இன்று துவக்கம்
அயலக தமிழர் தின விழா இன்று துவக்கம்
ADDED : ஜன 10, 2024 11:26 PM
சென்னை:தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், மூன்றாம் ஆண்டாக, 'தமிழ் வெல்லும்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து, சென்னை வர்த்தக மையத்தில், இன்றும், நாளையும் அயலக தமிழர் தின விழா நடக்க உள்ளது.
விழாவில், 58 நாடுகளில் இருந்து, தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் என, 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்க பதிவு செய்து உள்ளனர். மேலும், 266 தமிழ் சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
விழாவை, அமைச்சர் உதயநிதி, இன்று காலை துவக்கி வைக்கிறார். நாளைய விழாவில், முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுவதுடன், 'எனது கிராமம்' என்ற முன்னோடி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும், அயலகத் தமிழர்கள், அதற்குரிய நிதியை அளித்து, இத்திட்டத்தின் வழியே செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது.