Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தை வேவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி சதி திட்டம்!

தமிழகத்தை வேவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி சதி திட்டம்!

தமிழகத்தை வேவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி சதி திட்டம்!

தமிழகத்தை வேவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரி சதி திட்டம்!

UPDATED : செப் 12, 2025 04:45 PMADDED : செப் 11, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
கொழும்பு: இலங்கையில் பாகிஸ்தான் துாதரக அதிகாரியாக பணியாற்றிய அமீர் சுபைர் சித்திக், இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதுடன், தமிழகத்திற்கு உளவாளிகளை அனுப்பி வேவு பார்த்துள்ளார். இது தொடர்பான வழக்கில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், அக்., 15ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் உளவாளியாகச் செயல்பட்ட, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 35, என்பவர், கடந்த 2012ல் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதிர்ச்சி


அதேபோல, 2014ம் ஆண்டு, சென்னை மண்ணடியில் பதுங்கியிருந்த பாக்., உளவாளி ஜாகீர் உசேன், 35; இவரது கூட்டாளிகள் சிவபாலன், 40; சலீம், 35; ரபீக், 32, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

ஜாகீர் உசேன் அளித்த வாக்குமூலத்தின்படி, அதே ஆண்டில், சென்னை சாலிகிராமம், முத்தமிழ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அருண் செல்வராஜ், 36, என்பவரும், கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் இவர்கள், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர் விசாரணையில், ஜாகீர் உசேன், அருண் செல்வராஜ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அருண் செல்வராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் போல நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதன் வாயிலாக, தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு வட்டத்தில் அவர் இணைந்தார். அவரது மொபைல் போன், 'லேப்டாப்' உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தபோது, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாக்குமூலம்



அவற்றில், சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துாதரகம், சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், ஆந்திராவில் விசாகப்பட்டினம், கொச்சி கப்பல் கட்டும் துறைமுகம் உள்ளிட்ட பல இடங்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.

இவற்றை, அருண் செல்வராஜ், ஜாகீர் உசேன் ஆகியோர், மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்த பாக்., அதிகாரிகளிடம் ஒப்படைத்ததும் தெரிய வந்தது.

அருண் செல்வராஜ் மற்றும் ஜாகீர் உசேன் இருவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், 'எங்களுக்கு மூளையாகச் செயல்பட்டது, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியைச் சேர்ந்த அமீர் சுபைர் சித்திக், 51' என கூறியிருந்தனர்.

தொடர் விசாரணை


இதையடுத்து, அமீர் சுபைர் சித்திக் குறித்து தீவிரமாக விசாரித்தபோது, அவர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாக்., துாதரகத்தில், 'விசா' பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்ததையும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர் விசாரணையில், பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உறுப்பினரான இவர், தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன், அருண் செல்வராஜ் உள்ளிட்டோரை, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், பாக்., உளவாளிகளாக நியமித்து, தாக்குதலுக்கு வேவு பார்த்ததையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டறிந்து உறுதி செய்தனர்.

அமீர் சுபைர் சித்திக் தொடர்பான வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந் நீதிமன்றம், அமீர் சுபைர் சித்திக் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ள நிலையில், அமீர் சுபைர் சித்திக், வரும் அக்., 15ம் தேதி காலை 10:30 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டினரை வேவு பார்க்கும் 'கவுன்டர் இன்டலிஜென்ஸ்'

இந்தியாவுக்குள் ஊடுருவி ரகசியமாக செயல்படும் வெளிநாட்டினரை கண்காணிக்க, மத்திய உளவுத்துறையில் 24 மணி நேரமும் செயல்படும், 'கவுன்டர் இன்டலிஜென்ஸ்' எனும் எதிர் உளவு பார்த்தல் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவு, மாநில உளவுத் துறைகளிலும் உண்டு. ஆனால், பெயரளவில் செயல்படுவதாகவும், இப்பிரிவை பலப்படுத்துமாறும், மாநில உளவுத் துறைகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியது.
அதன்படி, தமிழக உளவுத் துறையின் கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவை பலப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இது குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், பிரிட்டனைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரான ஜோனாதன், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்பிக்க முயன்றார். திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் இருந்த பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இலியன் ஜெட்ரொகோவ் மார்க்கோவ் தப்பி ஓடிவிட்டார்.
இம்முகாமில் தங்க வைக்கப்பட்ட இலங்கை நாட்டினர், பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தனர். அதேபோல, சென்னை புழல் சிறை கைதிகள், 'வாட்ஸாப்' வாயிலாக, வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் ஆசாமி களை மிக எளிதாக தொடர்பு கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பத்திரிகையாளர்கள், மாணவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக வருவோர், இங்கு மத மாற்றத்திற்கான பிரசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை, தமிழக காவல் துறை யினருக்கு சுட்டிக்காட்டினோம். இதையடுத்து, கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவை தமிழக போலீசார் பலப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us