Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சாராய பலி 55 ஆக உயர்வு: ஆணைய தலைவர் விசாரணை

சாராய பலி 55 ஆக உயர்வு: ஆணைய தலைவர் விசாரணை

சாராய பலி 55 ஆக உயர்வு: ஆணைய தலைவர் விசாரணை

சாராய பலி 55 ஆக உயர்வு: ஆணைய தலைவர் விசாரணை

UPDATED : ஜூன் 23, 2024 08:37 AMADDED : ஜூன் 22, 2024 06:35 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை , 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 133 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முதல்வர் அறிவித்த ஒரு நபர் ஆணைய தலைவர் கோகுல்தாஸ் தன் விசாரணையை துவக்கினார்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மாலை, 3:30 மணி நிலவரப்படி, 183 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.

அவர்களில் நேற்று முன்தினம் இரவு வரை, 41 பேர் இறந்தனர். மூன்றாம் நாளான நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில், ஐந்து பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருவர் என, மொத்தம் ஏழு பேர் இறந்தனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை, 55 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மாதவச்சேரி கண்ணன்,55; வீராசாமி,40; ஆகியோர் நேற்று மாலை இறந்தனார். இதனால், கள்ளச்சாராயத்தால் இறந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கள்ளக்குறிச்சியில், 83 பேர், புதுச்சேரியில், 17 பேர், சேலத்தில், 31 பேர், விழுப்புரத்தில் இருவர் என மொத்தம், 133 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் நேற்று விசாரணையை துவங்கியது.

ஆணைய தலைவரான கோகுல்தாஸ் நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த், எஸ்.பி., ரஜித்சதுர்வேதி உள்ளிட்ட அதிகாரிகளிடம், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் விபரங்கள், சாராயம் விற்கப்பட்ட கருணாபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் முதன் முதலாக இறந்த சுரேஷ் மற்றும் பிரவீன் ஆகியோர் வீட்டிற்கு சென்று, சுரேஷ் மனைவி ரசீதாபானு, பிரவீன் தாய் ரெஜினா ஆகியோரிடம், 30 நிமிடங்கள் பேசினார். அப்போது, இருவரும் எப்போது சாராயம் குடித்தனர்; அதனால், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், சிகிச்சை பெற்ற விபரங்கள் மற்றும் யார் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கேட்டறிந்தார்.

ஆணைய தலைவரிடம், சுரேஷ் மனைவி ரஷீதாபானு கூறியதாவது: என் கணவர், கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜிடம், கடந்த 18ம் தேதி இரவு சாராயம் வாங்கி குடித்தார். அதிகாலை திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததும், உடலை வீட்டிற்கு கொண்டு வந்தோம்.

சற்று நேரத்தில் எதிர் வீட்டில் உள்ள எங்கள் உறவினரான பிரவீன், உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இறந்தார். இதனால், இருவரும் சாராயம் குடித்ததில் இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, கருணாபுரத்தை சேர்ந்த பலர் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு சென்றனர். இதில் பலரும் அடுத்தடுத்து இறந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த ஆணைய தலைவர், அவர்களிடம் சம்பவம் குறித்தும், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவ குழுவினரிடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஒரு மணி நேரம் விசாரித்தார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மாவட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், கள்ளச்சாராயம் குடித்து இறந்த நபர்களின் குடும்பத்தினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் விசாரணை மேற்கொண்டு முழு விபரம் குறித்த அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.

கள்ளச்சாராயம் குடித்தவர் மூளைச்சாவு

ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெரிய சாமி (வயது 40) என்பவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us