91.6 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்
91.6 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்
91.6 சதவீதம் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கம்
UPDATED : ஜூலை 03, 2024 09:00 AM
ADDED : ஜூலை 03, 2024 06:54 AM

சென்னை: தெற்கு ரயில்வேயில், கடந்த மூன்று மாதங்களில், 91.6 சதவீதம் சரியான நேரத்தில், ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், தாமதமின்றி இயக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில் பாதைகளை மேம்படுத்துவது, நவீன சிக்னல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், ரயில்களை சரியான நேரத்தில் இயங்குவது படிப்படியாக முன்னேற்றம் அடைந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்களை, மூன்று மாதங்களில் சரியான நேரத்தில் இயக்கியதில், 91.6 சதவீதத்தை எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது, 2023ம் ஆண்டில், 90 சதவீதமாக இருந்தது.
ஒவ்வொரு மாதமும் 10,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இந்த நிலையை எட்டியது சாதனையே. இதற்கு திறமையான கண்காணிப்பு, சிறந்த பாதை பராமரிப்பு போன்றவையே முக்கிய காரணம்.
தெற்கு ரயில்வேயில் மாதத்துக்கு சராசரியாக, 10,712 ரயில்கள் கையாளப்படுகின்றன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை காலகட்டத்தில், தெற்கு ரயில்வேயில், 27,631 ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. கிழக்கு மத்திய ரயில்வே, மத்திய ரயில்வேயுடன் ஒப்பிடும் போது, தெற்கு ரயில்வே அதிக அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.