பல் சிகிச்சை பெற்ற 8 பேர் பாக்டீரியா தொற்றால் மரணம்; வாணியம்பாடி மருத்துவமனையில் ஆய்வு
பல் சிகிச்சை பெற்ற 8 பேர் பாக்டீரியா தொற்றால் மரணம்; வாணியம்பாடி மருத்துவமனையில் ஆய்வு
பல் சிகிச்சை பெற்ற 8 பேர் பாக்டீரியா தொற்றால் மரணம்; வாணியம்பாடி மருத்துவமனையில் ஆய்வு
ADDED : மே 31, 2025 12:38 AM

வாணியம்பாடி : வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் பல் சிகிச்சை பெற்ற எட்டு பேர் பாக்டீரியா தொற்றால் உயிரிழந்தது குறித்து, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேற்று ஆய்வு செய்தார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, கச்சேரி சாலையில், 'அறிவு பல் மருத்துவமனை' இயங்கி வருகிறது. இங்கு, 2023ல் வாணியம்பாடி, நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி, வரதன், அலசந்தாபுரம் சத்யா, கோணாமேடு நர்மதா, பெருமாள்பேட்டை ஜெய்சிலி, பெரியபேட்டை ஆபிசூர் ரகுமான், உதயேந்திரம் அனிதா, செங்கிலிகுப்பம் இளங்கோவன் உட்பட 10 பேர், பல் சிகிச்சைக்காக சென்றனர்.
உத்தரவு
அவர்களுக்கு டாக்டர் அறிவரசன் சிகிச்சை அளித்தார். சிகிச்சை பெற்ற 10 பேரில் எட்டு பேர், ஆறு மாத இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதில், இந்திராணியின் மகன் ஸ்ரீராம்குமார், 32, தன் தாய்க்கு முறையாக பல் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்தார் எனக்கூறி, வாணியம்பாடி டவுன் போலீஸ், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர், மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு புகார் மனு அளித்தார்.
நடவடிக்கை எடுக்காததால், மருத்துவமனை முன் இருமுறை போராட்டம் நடத்தினார். இருமுறையும் போலீசார் அவரை கைது செய்த நிலையில், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதில், பல் சிகிச்சைக்காக, 'பெரியோஸ்டீயல் லிப்ட்' எனப்படும் கருவி பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த மருத்துவமனையில், அசுத்தமான நிலையில் இருந்த அந்த கருவி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
அசுத்தமான கருவியில் இருந்த பாக்டீரியா, சிகிச்சையின்போது நரம்பு வழியாக மூளைக்கு சென்று, 10 பேரை தொற்றுக்குள்ளாக்கியது. அதில், எட்டு பேர், 'நியூரோ மெலியோய்டோசிஸ்' நோய் பாதிப்பு ஏற்பட்டு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நியூரோ மெலியோய்டோசிஸ் என்பது, நரம்பியல் பிரச்னையை குறிக்கிறது. இந்த நோய்த் தொற்று, மத்திய மற்றும் புறநரம்பு மண்டலங்களை பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்படுவோருக்கு காய்ச்சல், தலைவலி, வலிப்பு, மண்டை நரம்பு வாதம், மூளை சீழ்பிடித்தல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.
குறைபாடு உள்ளவர்கள்
உயிரிழந்த எட்டு பேரும், மூளையில் ஏற்பட்ட ஒரே மாதிரி பாக்டீரியா தொற்றான நியூரோ மெலியோய்டோசிஸ் பாதிப்புக்குள்ளாகி உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை மற்றும் ஐ.சி.எம்.ஆர்.என்.ஐ.இ., மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் உட்பட பல அமைப்புகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகாருக்கு உள்ளான தனியார் பல் மருத்துவமனையில், திருப்பத்துார் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி நேற்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
ஆய்வு குறித்து, ஞானமீனாட்சியிடம் கேள்வி எழுப்பிய போது, “இந்த சம்பவம் இரு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிந்ததும் முழு விபரம் தெரிவிக்கப்படும்,” என்றார்.
இது தொடர்பாக இந்திய பல் மருத்துவ சங்க மாநில செயலர் செந்தாமரைக்கண்ணன், மாநில தலைவர் பிரின்ஸ் சோயஸ் வெளியிட்ட அறிக்கை:
நியூரோ மெலியோய்டோசிஸ் என்பது, வெப்ப மண்டல பகுதிகளில் மண் மற்றும் நீரில் பொதுவாக காணப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் மத்திய நரம்பு மண்டலத்தின் அரிய தொற்று. இறப்பு சதவீதம், 39 ஆக உள்ளது.
மூளைக்கட்டி, மூளைக்காய்ச்சல், நரம்பியல் குறைபாடுகளாக வெளிப்படும். இது முக்கியமாக நீரிழிவு நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளவர்களை பாதிக்கிறது.
இதில் இறப்பு என்பது பெரும்பாலும் நீரிழிவு, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் நோய் எதிர்ப்பு பிரச்னை உட்பட முன்பே பிரச்னை இருக்கும்போது தான் ஏற்படுகிறது.
இந்நோய், சுகாதார அமைப்புகளில், மருத்துவ பொருட்களை பாதுகாப்பாக கையாள்வதற்கான அவசர தேவையை எடுத்துக்காட்டுகிறது. பல் மருத்துவர்களை பொறுத்தவரை, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொற்று தடுப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.