வியாபாரியை தாக்கி அரிய வகை ரத்தினக்கல் பறிப்பு; ராமநாதபுரத்தில் 7 பேர் கும்பல் சிக்கியது!
வியாபாரியை தாக்கி அரிய வகை ரத்தினக்கல் பறிப்பு; ராமநாதபுரத்தில் 7 பேர் கும்பல் சிக்கியது!
வியாபாரியை தாக்கி அரிய வகை ரத்தினக்கல் பறிப்பு; ராமநாதபுரத்தில் 7 பேர் கும்பல் சிக்கியது!
ADDED : மார் 16, 2025 07:14 PM

ராமநாதபுரம்: வியாபாரியை தாக்கி, ரூ.60 லட்சம் மதிப்புள்ள அரிய வகை ரத்தினக்கல்லை பறித்துச் சென்ற 7 பேரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் 30 ஆண்டுகளாக ஆபரணங்களுக்கு பயன்படுத்தப்படும் கற்களை பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிவகாசியைச் சேர்ந்த தரகர் ஜாகிர் என்பவரை அணுகி உள்ளார். தம்மிடம் 7 கிராம் எடை கொண்ட அரியவகை ரத்தினக்கல் இருப்பதாக கூறி உள்ளார்.
இதையடுத்து, நெல்லையைச் சேர்ந்த ரவி என்பவரை, முனியசாமியிடம் ஜாகிர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர் அபுதாஹிர் என்பவரை ரவி போனில் தொடர்புகொண்டு உள்ளார்.
அதன் பின்னர், முனியசாமியை ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ரயில்வே கேட்டுக்கு அபுதாஹிர் வரச் சொல்லி உள்ளார். அவரின் பேச்சை நம்பிய முனியசாமி சென்றுள்ளார்.
அங்கு முன்னரே காத்திருந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர் வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரியவகை ரத்தினக்கல், அதற்கான ரசீது, செல்போன் மற்றும் 15,000 ரொக்கத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த முனியசாமி, ராமநாதபுரம் மாவட்ட போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
தீவிர புலன் விசாரணையின் முடிவில், அபுதாஹிர், முகமது அசாருதீன், முகமது நவுபால், முத்துசெல்வம், கனகராஜ் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரத்தினக்கல், ரூ.15,000, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.