5 நாள் தனியார் பொருட்காட்சி கலெக்டரே அனுமதி அளிக்கலாம்
5 நாள் தனியார் பொருட்காட்சி கலெக்டரே அனுமதி அளிக்கலாம்
5 நாள் தனியார் பொருட்காட்சி கலெக்டரே அனுமதி அளிக்கலாம்
ADDED : ஜன 12, 2024 11:36 PM
சென்னை:மாவட்டங்களில் நடக்கும் தனியார் பொருட்காட்சிகளுக்கு, ஐந்து நாட்கள் வரை, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களே அனுமதி வழங்கலாம் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், திறந்த வெளியிடங்கள் மற்றும் தனியார் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சமூக கூடங்கள், திறந்த வெளியிடங்கள்போன்றவற்றில், பொருட்காட்சி நடத்துவதற்கு முன், அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்கு அரசு பல்வேறுநிபந்தனைகளை விதித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மூன்று நாட்கள் வரை நடக்கும், தனியார் பொருட்காட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், மூன்று நாட்களுக்கு மேல் ஐந்து நாட்கள் வரை நடத்த, செய்தித்துறை இயக்குனர் அனுமதி அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கான அரசாணை, 2022 டிச., 12ல் வெளியிடப்பட்டது.
தற்போது அமைச்சர்கள் தலைமையில், செய்தியாளர் கூட்டம் அடிக்கடி நடக்கிறது. விழாக்களுக்கான ஒருங்கிணைப்பு நடக்கிறது. சமூக ஊடகம் தொடர்பான பணிகள் அதிகரித்து வருகின்றன.
மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரையுடன், அரசுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள், பொருட்காட்சி துவங்குவதற்கு, ஓரிரு நாட்கள் முன்னதாகத்தான் வருகின்றன. இதனால், அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, ஐந்து நாட்கள்வரை பொருட்காட்சி நடத்த, மாவட்ட கலெக்டர்களே அனுமதி அளிக்கலாம். அதற்கு மேல் நடத்தப்படும் பொருட்காட்சிகளுக்கு, தற்போதுள்ள நடைமுறையை பின்பற்றலாம் என, செய்தித்துறை இயக்குனர்அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று, அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து நாட்கள் வரை நடக்கும் தனியார் பொருட்காட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், விதிமுறைகளை பின்பற்றி அனுமதி அளிக்க, அரசு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.
இது செய்தித்துறை அலுவலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் அதிகாரம் குறைக்கப்படுவதாககவலை தெரிவித்து உள்ளனர்.