Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருவள்ளூரில் ஓராண்டில் 36 கொலை சம்பவங்கள்; தி.மு.க.,வுக்கு சேவையாற்றும் உளவுத்துறை

திருவள்ளூரில் ஓராண்டில் 36 கொலை சம்பவங்கள்; தி.மு.க.,வுக்கு சேவையாற்றும் உளவுத்துறை

திருவள்ளூரில் ஓராண்டில் 36 கொலை சம்பவங்கள்; தி.மு.க.,வுக்கு சேவையாற்றும் உளவுத்துறை

திருவள்ளூரில் ஓராண்டில் 36 கொலை சம்பவங்கள்; தி.மு.க.,வுக்கு சேவையாற்றும் உளவுத்துறை

UPDATED : ஜூலை 03, 2025 06:28 AMADDED : ஜூலை 03, 2025 02:55 AM


Google News
Latest Tamil News
மாவட்ட உளவுப்பிரிவு போலீசார், தி.மு.க.,வின் தேர்தல் பணியாளராக மாறியதால், குற்றங்களை முன்கூட்டியே கணிப்பதில்லை. இதனால், மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து காவல் கோட்டங்களில் ஓராண்டில், 36 கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதால், மக்கள் பதற்றம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி என, ஐந்து காவல் உட்கோட்டத்தில், 29 காவல் நிலையம், தலா ஒன்று என, ஐந்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையம் என, மொத்தம் 39 காவல் நிலையங்கள் உள்ளன.

மாவட்டத்தில் 39 காவல் நிலையங்களில், 1,150 பேர் பணிபுரிகின்றனர். இதில் உளவு பிரிவு, தனிப்பிரிவு போலீசார் பணியாற்றுகின்றனர். இதில், உளவு பிரிவு மாநில அளவில் உளவு தகவல்களை திரட்டுவதற்காக, இரு முக்கிய பிரிவுகள் காவல் துறையில் செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும், எஸ்.பி.,யின் நேரடி கட்டுப்பாட்டில், 'தனிப்பிரிவு' என்ற அமைப்பு, மாவட்ட அளவிலான உளவு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

மாநிலம் முழுதிலும் உளவுத் தகவல்கள் திரட்டும் பணியை, எஸ்.பி.சி.ஐ.டி., என்ற பிரிவு செய்து வருகிறது. தீவிரவாத செயல்பாடுகளை கண்காணித்து, உளவறியும் பிரிவும் மாநில உளவுத்துறையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.

மாநில உளவுத்துறையின் தலைமையிடம் சென்னையாக இருந்தாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி.சி.ஐ.டி., உளவுப்பிரிவுக்காக தனியாக அலுவலகம் உள்ளது.

மாநிலத்தில் பொது அமைதியை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள், சட்டம் -- ஒழுங்கை பேணுதல் தொடர்பான தகவல்களை, உளவுத்துறையின் தலைமையிடத்திற்கு தெரியப்படுத்தும் பணியை மாவட்டங்களில் உள்ள எஸ்.பி.சி.ஐ.டி., பிரிவு கவனித்து வருகிறது.

ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் அப்பிரிவு சரிவர இயங்கவில்லை. மாவட்டம் முழுதும், 20க்கும் மேற்பட்ட எஸ்.பி.சி.ஐ.டி.,க்கள், சிறப்பு தனிப்படை பிரிவில் 40 பேர் என, மொத்தம் 60 பேர் பணியில் உள்ளனர்.

இவர்கள் குற்றங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே கணிக்க தவறியதால், ஓராண்டில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் 36 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, மாவட்டத்தில் போதை மாத்திரைகள், ஊசி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், போதையில் இளைஞர்கள் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழு முக்கிய சம்பவங்கள்


1 திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் 2025 ஜூன், 25ம் தேதி நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்து முகேஷ், 22, உயிரிழந்தார். போதை வஸ்த்துக்கள் விற்பனையை, காவல் துறையிடம் தெரிவித்ததால், அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டனர்.

2 திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் மாட்டிறைச்சி விற்பதில் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்த நிலையில், 2025 ஜூன் 3ம் தேதி ரவி என்பவரை, வீடுபுகுந்து சூர்யா என்பவர் வெட்டி படுகொலை செய்தார்.

3 ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை, கஞ்சா போதையில் இருந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கத்தியால் வெட்டி படுகொலை செய்தார்.

4 திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 'மாஜி' ராணுவ வீரர் வெங்கடேசனை, 2025 பிப்., 3ம் தேதி சென்னையைச் சேர்ந்தவர்கள் கள்ளத்தொடர்பு விவகாரத்தில், மனைவி ஏவியதால் கொலை செய்தனர்.

5 திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தில், மார்ச் 20ம் தேதி கஞ்சா புகைக்கும் போது, நண்பர்களான லோகேஷ் மற்றும் ஜெகனுக்குள் ஏற்பட்ட தகராறில், லோகேஷ் என்பவரை ஜெகன் கத்தியால் வெட்டி கொலை செய்தார்.

6ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் ஊராட்சி, தெலுங்கு காலனியைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன், 19, ஆகாஷ், 18. இவர்கள் முன்பகை காரணமாக, 2025 ஜூன் 18ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

7 திருத்தணி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் வெங்கடேஸ்வரன் மற்றும் வெங்கடேசன் என, இருதரப்பினர் இடையே நிலத்தகராறு இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஒருவர் பக்கம் சாதகமான சூழலை அறிந்த வெங்கடேசன், வெங்கடேஸ்வரனை திட்டமிட்டு ஆந்திர எல்லை பகுதியில் டிராக்டர் ஏற்றி கொலை செய்தார்.

தகவல்களை கோட்டை விடும் போலீசார்


குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை போலீசார், தி.மு.க.,விற்கு பூத் வாரியாக உள்ள ஓட்டு வங்கி எவ்வளவு? கிராமங்களில் ஜாதி வாரியாக பதிவாகும் ஓட்டுகளில், எத்தனை சதவீதம் தி.மு.க.,விற்கு கிடைக்கும். எதிர்க்கட்சி முக்கிய பிரமுகர்களின் செயல்பாடுகள், புதிதாக துவக்கப்பட்ட தமிழக வெற்றி கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தகவல் சேகரிப்பதில் மும்முரம் காட்டுகின்றனர். இதனால், சட்டம் - ஒழுங்கு குறித்து தகவல்களை சேகரிக்க முடியாமல், முன்கூட்டியே கணிக்காமல் கோட்டை விடுகின்றனர்.

- எம்.ஆர்.மதிவேந்தன், சமூக ஆர்வலர், திருவள்ளூர்.

ஆந்திர எல்லையோரம் உள்ள ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, உள்ளிட்ட மூன்று முக்கிய சோதனைச்சாவடியில் பெயரளவில் மட்டுமே சோதனை நடைபெறுகிறது.

அதலபாதாளத்தில் சட்டம் ---- ஒழுங்கு

மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், திருத்தணி, திருவாலங்காடு, களாம்பாக்கம், அகூர், கனகம்மாசத்திரம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், கடம்பத்துார், மப்பேடு, பேரம்பாக்கம், அம்மையார்குப்பம், பள்ளிப்பட்டு, பூண்டி, ராமஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பெருகி வருகிறது. இதனால், கஞ்சா போதையில் வெட்டிக்கொலை செய்வது அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 30க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. சட்டம் --- - ஒழுங்கு சீர்கெட்டு அதலபாதாளத்தில் உள்ளதால், மக்கள் பதற்றத்துடன் சென்று வருகின்றனர்.



கொலை சம்பவங்கள்

திருவள்ளூர் சப் - டிவிஷன் --8திருத்தணி சப் - டிவிஷன் --9ஊத்துக்கோட்டை சப் - டிவிஷன் --5கும்மிடிப்பூண்டி சப் - டிவிஷன் --5பொன்னேரி சப் - டிவிஷன் --9மொத்தம் 36



பெயரளவுக்கு மட்டுமே சோதனை

சோதனைச்சாவடி வழியாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துவது தொடர்கிறது. ஆந்திர எல்லையோரம் உள்ள ஊத்துக் கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, உள்ளிட்ட மூன்று முக்கிய சோதனைச்சாவடியில் பெயரளவில் மட்டுமே சோதனை நடைபெறுகிறது. கண்காணிக்க வேண்டிய போலீசார் மெத்தனமாக உள்ளனர்.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us