5 ஆண்டுகளும் நானே முதல்வர்: சித்து; எனக்கு வேறு வழியில்லை: சிவகுமார்
5 ஆண்டுகளும் நானே முதல்வர்: சித்து; எனக்கு வேறு வழியில்லை: சிவகுமார்
5 ஆண்டுகளும் நானே முதல்வர்: சித்து; எனக்கு வேறு வழியில்லை: சிவகுமார்
ADDED : ஜூலை 03, 2025 04:16 AM

பெங்களூரு: ''காங்கிரஸ் ஆட்சியில் ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர்,'' என்று, கர்நாடகாவின் சித்தராமையா அதிரடியாக அறிவித்து உள்ளார். ''எனக்கு வேறு என்ன வழி உள்ளது. முதல்வருக்கு பக்கபலமாக நின்று அவரை ஆதரிக்க வேண்டும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் விரக்தியுடன் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையில், முதல்வர் பதவிக்கு போட்டி உள்ளது.
இருவரின் ஆதரவாளர்களும் மாறி, மாறி முதல்வர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேசினர்.
போர்க்கொடி
இதையடுத்து, கடந்த 30ம் தேதியும், 1ம் தேதியும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, 'பஞ்சாயத்து' பேசினார். அவரிடம், அமைச்சர் பதவி கேட்டு மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பலரும் போர்க்கொடி துாக்கினர்.
இந்நிலையில், சிக்கபல்லாபூர் நந்திமலையில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:
ஜனநாயகத்தில் அமைச்சராகும் உரிமை எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு. சுயேச்சை உட்பட எங்களுக்கு 140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. ஆனால், 34 பேரை மட்டுமே அமைச்சராக்க முடியும். அமைச்சர் பதவி குறித்து, கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.
நவம்பர் மாதம் நான் பதவி விலகுவேன் என்று எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகிறார். ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வராக இருப்பேன். அசோக், விஜயேந்திரா எங்கள் கட்சியினர் இல்லை. அவர்கள் பா.ஜ.,வினர். அரசில் அதிகார மாற்றம் குறித்து பகல் கனவு காண்கின்றனர்.
இடைவிடாமல் பொய் பேசி வரும் அவர்களுக்கு, உண்மையை எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. அவர்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். அரசு ஐந்து ஆண்டுகள் பாறை போன்று உறுதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரச்னை இல்லை
துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:
எனக்கு வேறு என்ன வழி உள்ளது. முதல்வருக்கு பக்கபலமாக நின்று அவரை ஆதரிக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் இனி கட்சி மேலிடம் பார்த்து கொள்ளும். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
சித்தராமையா முதல்வராக இருக்கும் போது, என் பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.