Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சர்வதேச போதை பொருள் கும்பல் சிக்கியது என்.சி.பி., அதிரடிக்கு அமித் ஷா பாராட்டு

சர்வதேச போதை பொருள் கும்பல் சிக்கியது என்.சி.பி., அதிரடிக்கு அமித் ஷா பாராட்டு

சர்வதேச போதை பொருள் கும்பல் சிக்கியது என்.சி.பி., அதிரடிக்கு அமித் ஷா பாராட்டு

சர்வதேச போதை பொருள் கும்பல் சிக்கியது என்.சி.பி., அதிரடிக்கு அமித் ஷா பாராட்டு

ADDED : ஜூலை 03, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: மத்திய அரசின் என்.சி.பி., எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமையிலான குழு சமீபத்தில் நடத்திய, 'ஆப்பரேஷன் மெட் மேக்ஸ்' எனும் நடவடிக்கையில், 10க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் கும்பலின் வினியோக சங்கிலியை முறியடித்து உள்ளது.

வழக்கமான போதைக்காக பயன்படுத்தப்படும் 'கோகைன், ஹெராயின்' போன்றவற்றுக்கு மாற்றாக, மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு மாத்திரைகளும் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.

'மெடிக்கல் சப்ளை செயின்' எனப்படும் மருத்துவ வினியோக தொடர் வாயிலாக இவை எளிதில் வினியோகிக்கப்படுகின்றன. மேலும், அதிக லாபம்; கண்காணிப்பு குறைவு போன்றவை போதை மாத்திரை கடத்தலை அதிகரித்துள்ளது.

'டெலிகிராம்' போன்ற 'மொபைல் போன்' செயலிகள் வழியாக போதை மாத்திரை கும்பல் வாடிக்கையாளர்களை பிடித்து, அவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக 'டெலிவரி' செய்கிறது.

அதற்கான பணத்தை நேரடியாக பெறாமல், 'கிரிப்டோகரன்சி' எனப்படும் மெய்நிகர் பணமாக பெறுகின்றனர். இப்படி அரசுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் சவால்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், டில்லியில் உள்ள என்.சி.பி., தலைமையகத்துக்கு, 'டிரமடால்' போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மே 25ல், டில்லியின் மண்டி பகுதியில் ஒரு காரை போலீசார் மடக்கினர். அதில் மருந்தாளுனர்கள் இருவர் இருந்தனர். அவர்களிடம் இருந்து, 3.7 கிலோ டிரமடால் மாத்திரை கைப்பற்றப்பட்டது.

வலி நிவாரணியான இந்த டிரமடால் மாத்திரை ஒரு செயற்கை ஓபியாய்டு. இது மூளையில் சேர்ந்து வலியை குறைக்கும்.

இதையே அதிகம் பயன்படுத்தினால் மூளையில் நரம்பியல் ரசாயனங்களை வெளியிடச் செய்து போதை உணர்வு, அடிமையாக்குவது, மரணம் போன்ற நிலையை ஏற்படுத்தும்.

டில்லியில் பிடிபட்ட கும்பலிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஒரு பெரிய ஆன்லைன் தளத்தில் விற்பனையாளர்களாக இயங்கியதை

தொடர்ச்சி 16ம் பக்கம்

சர்வதேச...

முதல் பக்கத் தொடர்ச்சி

ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து என்.சி.பி., அதிகாரிகள் கூறியதாவது:

ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த நபர் இந்த போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்துள்ளனர். அவரின் கும்பல் இந்தியாவில் உள்ளவர்களை இயக்கியுள்ளனர். வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கவர உடுப்பியில், 'கால் சென்டர்' அமைத்துள்ளனர்.

போதைப் பொருளை, 'ஆர்டர்' செய்பவர்களிடம் இருந்து கிரிப்டோகரன்சி வாயிலாக பணத்தை பெற்றுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, மருந்து நிறுவனத்துக்கு நேரடி தொடர்பு உள்ளது.

உடுப்பி கால்சென்டர் பெரிய ஆர்டர்களை பெற்று சமீபத்தில் அதை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பினர். இது குறித்த தகவல் இன்டர்போலுக்கு பகிரப்பட்டது. அந்த சரக்குகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்த போதைப் பொருள் விநியோக சங்கிலியைச் சேர்ந்த 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அமெரிக்கர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

'ஆப்பரேஷன் மெட் மேக்ஸ்' குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிக்கையில், 'இந்த விசாரணை பல அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த உதாரணம். பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு போதைப்பொருள் கடத்தல் கும்பலையும் தண்டித்து, நம் இளைஞர்களைப் பாதுகாக்க உறுதியுடன் உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us