Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நான்கு ஆண்டாக 324 ரயில்கள் விரைவு கட்டணத்தில் இயக்கம்

நான்கு ஆண்டாக 324 ரயில்கள் விரைவு கட்டணத்தில் இயக்கம்

நான்கு ஆண்டாக 324 ரயில்கள் விரைவு கட்டணத்தில் இயக்கம்

நான்கு ஆண்டாக 324 ரயில்கள் விரைவு கட்டணத்தில் இயக்கம்

ADDED : பிப் 25, 2024 02:54 AM


Google News
சென்னை:கொரோனா பாதிப்புக்கு பின் நான்கு ஆண்டுகளாக 324 சாதாரண கட்டண ரயில்களை விரைவு கட்டணத்தில் இயக்குவதால் பயணியர் அவதிப்படுகின்றனர்.

மற்ற மண்டலங்களை போல தெற்கு ரயில்வேயிலும் மீண்டும் சாதாரண கட்டணத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்த பின் நாடு முழுதும் மின்சார, விரைவு ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன. மாவட்டங்களில் இருந்து முக்கிய நகரங்களை இணைக்கும் குறுகிய துார சாதாரண கட்டண ரயில்களும் இயக்கப்படுகின்றன.

அதன்படி தெற்கு ரயில்வேயில் 324 ரயில்களின் சேவை மீண்டும் துவங்கி உள்ளது. ஆனால் ஏற்கனவே இருந்த சாதாரண கட்டண முறையை நீக்கி விட்டு விரைவு அல்லது சிறப்பு ரயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டியுள்ளது என பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ரயில் பயணியர் கூறியதாவது:

விரைவு ரயில் என்பதால் குறைந்தபட்ச கட்டணமே 30 ரூபாய் என்று உள்ளது. கொரோனாவுக்கு முன் இது 10 ரூபாயாக இருந்தது. எனவே பழைய முறைப்படி சாதாரண கட்டணத்தில் ரயில்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கொரோனாவுக்கு பின் குறுகிய துார சாதாரண கட்டண ரயில்கள் தற்போதும் சிறப்பு அல்லது விரைவு கட்டணத்தில் தான்இயக்கப்படுகின்றன.

மீண்டும் சாதாரண கட்டணத்தில் இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாரியம் தெரிவிக்கவில்லை. வாரிய அறிவிப்பு வந்தால், உடனே அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதில் அளிக்கவில்லை

கர்நாடகா, கோவா உள்ளிட்ட பகுதிகள் இடம்பெறும் தென் மேற்கு ரயில்வே உள்ளிட்ட சில ரயில்வே மண்டலங்கள் உடனடியாக அமல்படுத்தி உள்ளன. ஆனால் தெற்கு ரயில்வேயில் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுகுறித்து தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் இதுவரையில் எந்த பதிலும் அளிக்க வில்லை.

- பாஸ்கர்

சென்னை ரயில் கோட்ட முன்னாள்

ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us