அடுக்குமாடி திட்டங்களில் 3,000 பத்திரங்கள் காத்திருப்பு
அடுக்குமாடி திட்டங்களில் 3,000 பத்திரங்கள் காத்திருப்பு
அடுக்குமாடி திட்டங்களில் 3,000 பத்திரங்கள் காத்திருப்பு
ADDED : ஜன 25, 2024 12:49 AM
சென்னை:நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடைப்பிடிப்பதில் தெளிவில்லாத சூழல் நிலவுவதால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு விற்பனை செய்வதற்கான, 3,000 பத்திரங்கள் பதிவுக்கு காத்திருப்பதாக புகார் எழுந்து உள்ளது.
தமிழகத்தில், 2012ல் வழிகாட்டி மதிப்புகள் சீரமைக்கப்பட்டன.
இவற்றில் பெரும்பாலான மதிப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 2017ல் 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
இந்த மதிப்பு அடிப்படையில் சொத்து பரிவர்த்தனை பத்திரப்பதிவு நடந்து வந்தது.
இந்நிலையில், 2023 ஏப்ரல் 1 முதல், 2012ல் அறிவிக்கப்பட்ட மதிப்புகள் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்தது.
சுற்றறிக்கைக்கு தடை
இதை எதிர்த்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் கூட்டமைப்பான கிரெடாய் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், 2012ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பை மீண்டும் அமல்படுத்தும் சுற்றறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, 2017 நிலவரப்படியான வழிகாட்டி மதிப்பை பதிவுத்துறை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது.
இது குறித்து இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறை மவுனமாக இருப்பது நல்லதல்ல. இதனால், பல்வேறு வகையான பிரச்னைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் வீடு விற்பனை தொடர்பான, 3,000 பத்திரங்கள் காத்திருக்கின்றன.
எந்த வழிகாட்டி மதிப்பை ஏற்பது என்பது தெளிவானால், இந்த பத்திரங்கள் அனைத்தும் பதிவுக்கு வரும்.
ஆலோசனை
இதே போன்று, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., ஆகியவற்றில் ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி நில ஒதுக்கீட்டுக்கான கட்டணம், கூடுதல் தள பரப்பு அனுமதிக்கான பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணங்கள் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பதிவுத்துறை அமைச்சர் இதில் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபாவுக்கான தேர்தல் வரவுள்ள பின்னணியில், வழிகாட்டி மதிப்பு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பதிவுத்துறைஉயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.