ADDED : ஜூன் 05, 2025 11:31 PM
அரசு அலுவலகங்களில் இரண்டு நாட்களில், 300 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
மாநிலம் முழுதும் உள்ள 1,100 அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணிகளை கண்காணிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதை நேற்று பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி அளித்த பேட்டி: அரசு அலுவலகங்களில், பல ஆண்டுகளாக குப்பை அகற்றப்படாமல் இருக்கிறது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில், 10 கோடி ரூபாய் செலவில், 1,100 அரசு அலுவலகங்களில் குப்பை அகற்றப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில், 300 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கிராம பஞ்சாயத்துகள், அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகளில் துாய்மை பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.