அருங்காட்சியக நிதி கையாடல் வழக்கு முன்னாள் அதிகாரி உட்பட 3 பேருக்கு சிறை
அருங்காட்சியக நிதி கையாடல் வழக்கு முன்னாள் அதிகாரி உட்பட 3 பேருக்கு சிறை
அருங்காட்சியக நிதி கையாடல் வழக்கு முன்னாள் அதிகாரி உட்பட 3 பேருக்கு சிறை
ADDED : ஜூன் 13, 2025 02:54 AM
சென்னை:அரசு அருங்காட்சியக முன்னாள் அதிகாரி உட்பட மூவருக்கு, தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, எழும்பூரில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இதில், கணக்காளராக ஜஹாருல்லா, மேற்பார்வையாளர்களாக ஜவஹர், ஜெயராஜ் மற்றும் உதவி இயக்குநராக தேவதாஸ் ஆகியோர் பணிபுரிந்தனர். அருங்காட்சியக பணத்தை கையாடல் செய்ததாக கூறப்பட்ட புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்தது.
கடந்த 2003ம் ஆண்டு நவ., 11 முதல் 2007ம் ஆண்டு ஜூன் 30 வரை, அருங்காட்சியக நுழைவு கட்டணம், காட்சி அரங்கு வைப்பு தொகை, புத்தகங்கள் விற்பனை என, பல்வேறு வகைகளில், 5 லட்சத்து 44,085 ரூபாய் வரை கையாடல் செய்தது தெரியவந்தது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், பல்வேறு பிரிவுகளில், நான்கு அரசு ஊழியர்களுக்கு எதிராக தனித்தனியாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அனைவரும் பணி ஓய்வு பெற்ற நிலையில், இவர்கள் மீதான வழக்குகளின் விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ப்ரியா முன் நடந்தது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஜஹாருல்லா, ஜவஹர், ஜெயராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமாக மொத்தம் 15.5 லட்சம் ரூபாயும் விதிக்கப்படுகிறது.
இதேபோல, ஜஹாருல்லா மீதான மற்ற மூன்று வழக்குகளில், தலா 5 ஆண்டும், ஜவஹர் மீதான மற்ற இரு வழக்குகளில், தலா 5 ஆண்டும், ஜெயராஜ் மீதான மற்றொரு வழக்கில், 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேவதாஸ் இறந்து விட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.