ADDED : ஜூன் 13, 2025 02:55 AM
ஈரோடு:தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும், மாற்று முறையில் போதைக்காக பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் போன்றவற்றின் விற்பனையை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரோட்டில் அகில்மேடு வீதியில் உள்ள, கெமிக்கல் விற்பனை கடை உட்பட சில நிறுவனங்களில், ஈரோடு மதுவிலக்கு போலீசார், மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
குறிப்பாக மெத்தனால், எத்தனால், சால்வண்ட் என குறிப்பிட்ட கெமிக்கல்களின் விபரத்தை ஆய்வு செய்து விபரம் கேட்டறிந்தனர். இவற்றை தனி நபர்களுக்கு விற்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள், ஆய்வகங்கள், கல்லுாரிகள் போன்றவைகளுக்கு மட்டும், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டும் வழங்க அறிவுறுத்தினர். மாவட்ட அளவில், 300க்கும் மேற்பட்ட கெமிக்கல் விற்பனை, பயன்பாட்டு நிறுவனங்களில் சோதனை நடத்தி இம்மாத இறுதிக்குள், அரசுக்கு அறிக்கை வழங்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.