/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவகிரி கொலை வழக்கில் 4 பேருக்கு 3 நாள் காவல் சிவகிரி கொலை வழக்கில் 4 பேருக்கு 3 நாள் காவல்
சிவகிரி கொலை வழக்கில் 4 பேருக்கு 3 நாள் காவல்
சிவகிரி கொலை வழக்கில் 4 பேருக்கு 3 நாள் காவல்
சிவகிரி கொலை வழக்கில் 4 பேருக்கு 3 நாள் காவல்
ADDED : ஜூன் 14, 2025 06:16 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்த ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி மே, 1ல் கொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளை போனது. இவ்வழக்கில் மே, 19ல் அரச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ், நகைகளை உருக்கி கொடுத்த நகைக்கடைக்காரர் ஞானசேகரன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஞானசேகரன் தவிர மற்ற மூவரும் இக்கொலை தவிர, கொலை, கொள்ளை உட்பட, 17 குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் உறுதி செய்தனர். இரு நாட்களுக்கு முன், ஞானசேகரன் தவிர மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களிடம் விரிவாக விசாரிக்க, நான்கு பேரையும், 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க, கொடுமுடி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி பாண்டியராஜன் மனுவை விசாரித்து, நேற்று மாலை, 5:00 மணி முதல், 16ம் தேதி மாலை, 5:00 மணிவரை மூன்று நாட்கள் போலீஸ் காவல் வழங்கினார்.
இதையடுத்து, விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையிலான போலீசார், நால்வரையும் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி தனி இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஞானசேகரன் தவிர மற்ற மூவரும், பல்லடம், சென்னிமலை உட்பட பல கொலையில் ஈடுபட்டதாக கூறி உள்ளனர். ஆனால், சென்னிமலை கொலை வழக்கில் வேறு, 11 நபர்கள் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அப்பாவிகள் என எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், போலீஸ் காவலில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில், பல்வேறு வழக்குகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.