மின்சார ஆட்டோ வாங்க பெண்களுக்கு 3 லட்சம் கடன்
மின்சார ஆட்டோ வாங்க பெண்களுக்கு 3 லட்சம் கடன்
மின்சார ஆட்டோ வாங்க பெண்களுக்கு 3 லட்சம் கடன்
ADDED : ஜூன் 17, 2025 06:28 AM

சென்னை : மின்சார ஆட்டோ வாங்க, மகளிருக்கு, 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம், கூட்டுறவு வங்கிகளில் துவக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்படுகின்றன. நகைக்கடன், பயிர்க்கடன் உட்பட பல்வேறு பிரிவுகளில் கடன்களை வழங்குகின்றன.
முதல் முறையாக, வாகன கடன் பிரிவில், அரசு பணியாளர்களுக்கு மோட்டார் பைக், கார் வாங்குவதற்கு கடன் வழங்கும் திட்டம், கடந்த ஆண்டில் துவக்கப்பட்டது. வாகன மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில், 1,500 பேருக்கு, 2 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
தனிநபருக்கும் வாகன கடன் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர், மின்சார ஆட்டோ வாங்க, தலா 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 1,000 மகளிருக்கு கடன் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மகளிருக்கு, 9 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். வாகன விலை விபரம் அடங்கிய அறிக்கை உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் கூட்டுறவு வங்கிகளை அணுகினால், கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.