தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏன்? ஆய்வு செய்ய பொறுப்பாளர்கள் நியமனம்
தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏன்? ஆய்வு செய்ய பொறுப்பாளர்கள் நியமனம்
தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏன்? ஆய்வு செய்ய பொறுப்பாளர்கள் நியமனம்
ADDED : ஜூன் 26, 2024 07:28 AM

மதுரை : லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய பா.ஜ.,வில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்தாலும், வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து தோல்விக்கான காரணங்கள், தேர்தலில் பா.ஜ.,வினரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரைக்கு மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், விருதுநகருக்கு கரு.நாகராஜன், திருச்சிக்கு ராமசீனிவாசன் உட்பட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பொறுப்பாளர்கள் தொகுதிவாரியாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். சட்டசபை, லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பார்வையாளர்கள், அணிப்பிரிவினர் உட்பட கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி அதனை மாநில தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.
இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், அதற்கு ஒத்துழைக்கவும் வலியுறுத்தி, மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆடியோ அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 'லோக்சபா தேர்தலில் எந்தெந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இன்னும் இருந்திருக்கும், எந்த இடத்தில் நமக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது, எத்தனை ஓட்டுச்சாவடிகளில் நமக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது, அங்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததற்கு என்ன காரணம், எந்த மண்டல்களில் குறைந்த ஓட்டுகள் கிடைத்தன,
அதற்கான காரணம் என்ன, நமக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தவர்கள் யார், யார், வருங்காலத்தில் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிக்கையாக தயாரித்து ஜூன் 30க்குள் மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் ஜூலை 6 ல் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.