இ.ஓ.டபிள்யூ., இணையதளத்தில் எப்.ஐ.ஆர்., பதிவேற்றம் எப்போது?
இ.ஓ.டபிள்யூ., இணையதளத்தில் எப்.ஐ.ஆர்., பதிவேற்றம் எப்போது?
இ.ஓ.டபிள்யூ., இணையதளத்தில் எப்.ஐ.ஆர்., பதிவேற்றம் எப்போது?
ADDED : மார் 12, 2025 12:46 AM

சென்னை: புதிதாக வடிவமைக்கப்பட்ட, பொருளாதார குற்றப்பிரிவு இணையதளத்தில், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கைகளை பதிவேற்றம் செய்வதில், போலீசார் திட்டமிட்டே காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தமிழக காவல் துறையில், வணிக குற்றப்புலனாய்வு பிரிவையும் இணைத்து, இ.ஓ.டபிள்யூ., எனப்படும் பொருளாதார குற்றப்பிரிவு செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம், சென்னை அசோக் நகரில் உள்ளது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஒன்பது லட்சம் முதலீட்டாளர்களிடம், 1,167 நிதி நிறுவனங்கள், 14,346 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், இப்பிரிவுக்கு புதிதாக இணையதளம் வடிவமைக்கப்பட்டது.
அதில், எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாக, முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த, 2021ல், வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், எப்.ஐ.ஆரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, தமிழக காவல் துறையில், எப்.ஐ.ஆர்., பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பார்க்கும் வசதி உள்ளது.
அதேபோல, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., இணையதளத்தில் எல்லாரும் பார்க்கும்படி, எப்.ஐ.ஆர்., பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஆனால், பொருளாதார குற்றப்பிரிவுக்கான இணையதளத்தில், எப்.ஐ.ஆர்., பதிவேற்றம் செய்யாமல், போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர். புகார்தாரர்களான எங்களுக்கும் எப்.ஐ.ஆர்., நகல் தர மறுக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.