விக்கிரவாண்டி தேர்தல் திருவிழா விவசாய வேலைகள் முடக்கம்
விக்கிரவாண்டி தேர்தல் திருவிழா விவசாய வேலைகள் முடக்கம்
விக்கிரவாண்டி தேர்தல் திருவிழா விவசாய வேலைகள் முடக்கம்
ADDED : ஜூலை 05, 2024 01:55 AM
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், கட்சி யினரின், 'அன்பான' கவனிப்பால், விவசாய வேலைகளுக்கு செல்ல யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால், ஆட்கள் பற்றாக்குறையால் கிராமங்களில் விவசாயம் முடங்கியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில், வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இருப்பினும், தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க., வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதனால், 25 அமைச்சர்கள், ஏராளமான தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணி மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல, மாநிலம் முழுதும் இருந்து வந்துள்ள பா.ம.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், எம்.எல்.ஏ.,க்களும், முன்னணி தலைவர்களும் குவிந்துள்ளனர்.
கட்சியின் நிறுவனர் ராமதாசின் சொந்த மாவட்டம் என்பதால், விக்கிரவாண்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் பா.ம.க.,வினர் தீவிரமாக உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினரும், தேர்தல் பணிகளை தங்களுக்கே உரிய பாணியில் வேகப்படுத்தி வருகின்றனர். தி.மு.க., - பா.ம.க., கட்சியினருடன் அவர்கள் கூட்டணி கட்சியினரும் தினமும் விக்கிரவாண்டிக்கு படையெடுத்தபடி உள்ளனர். இதனால், விக்கிரவாண்டி தொகுதியில் எங்கு பார்த்தாலும் கரை வேட்டிகளாக காட்சியளிக்கிறது.
அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக, காலையில் ஆரம்பித்து இரவு வரை வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிக்கின்றனர்; தெருமுனை பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், மூன்று வேளையும் விதவிதமான உணவுகள், குவார்ட்டர் மற்றும் கோழி பிரியாணி, கைநிறைய கவர் என, கவனிப்பும் உச்சகட்டமாக உள்ளது.
இன்னொரு பக்கம், அதிகாரிகளின் கண்களில் மண்ணை துாவி விட்டு, இரவு நேரத்தில் பணம், பரிசுப் பொருட்கள் வினியோகமும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அரசியல் கட்சியினரின், 'அன்பான' கவனிப்பாலும், உபசரிப்பாலும், தேர்தல் பிரசாரம் துவங்கியதில் இருந்து விவசாய வேலைகளுக்கு செல்ல யாரும் ஆர்வம் காட்டவில்லை.
கட்சியினருடன் சென்று கொடி பிடித்தால், கோஷமிட்டால், பணம், பிரியாணி எளிதில் கிடைப்பதால், விவசாய வேலைக்கு ஆட்கள் செல்வது குறைந்து விட்டது.
இதன் காரணமாக, கிராமங்களில் நாற்று விடுவது, நடவு நடுவது, களை எடுப்பது, உரம் போடுவது உள்ளிட்ட விவசாய பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் -