ADDED : ஜூன் 06, 2024 12:42 AM

சென்னை: நாட்டில் இயக்கப்படும் 102 வந்தே பாரத் ரயில் சேவைகளில், சராசரியாக பயணியர் கூட்டம், 105 சதவீதமாக உள்ளது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 102 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை - மைசூரு, எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை -- விஜயவாடா, திருவனந்தபுரம் - காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பம், கூடுதல் வசதிகள் கொண்ட இந்த ரயில்களுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பெரும்பாலானநேரங்களில் வந்தேபாரத் ரயில்களில் பயணியர் கூட்டம் முழுமையாக காணப்படுகிறது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும், 102 வந்தே பாரத் ரயில்களில், சராசரியாக பயணியர் கூட்டம், 105.7 சதவீதமாக இருக்கிறது. 2023 ஏப்., முதல் கடந்த மார்ச் வரையில், 18,423 வந்தே பாரத் ரயில், 'டிரிப்'கள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில்கள் 1 கோடியே 24 லட்சத்து, 87,540 கி.மீ., துாரம் இயக்கப்பட்டுள்ளன. கேரளாவில் வந்தே பாரத் ரயிலில் பயணியர் கூட்டம் அதிகபட்சமாக, 175.3 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.