'ஹைபிரிட்' கார் பதிவுக்கட்டணம் தள்ளுபடி செய்தது உ.பி., அரசு
'ஹைபிரிட்' கார் பதிவுக்கட்டணம் தள்ளுபடி செய்தது உ.பி., அரசு
'ஹைபிரிட்' கார் பதிவுக்கட்டணம் தள்ளுபடி செய்தது உ.பி., அரசு
ADDED : ஜூலை 10, 2024 01:51 AM

புதுடில்லி:சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஹைபிரிட் மின்சார கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை, முழுமையாக தள்ளுபடி செய்வதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்த கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 1.50 லட்சம் ரூபாயிலிருந்து 3.50 லட்சம் ரூபாய் வரை பயனடைய முடியும்.
உ.பி., அரசு, கடந்த ஜூலை 5ம் தேதி முதல், 'ஸ்ட்ராங் ஹைபிரிட்' மின்சார வாகனங்கள் மற்றும் 'பிளக்-இன் ஹைபிரிட்' மின்சார வாகனங்களின் பதிவுக் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி என்ற கொள்கையை, அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய பங்கு
ஏற்கனவே மின்சார வாகங்களுக்கான பதிவுக் கட்டணத்தை உ.பி., அரசு கடந்தாண்டு முழுமையாக தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
சாலை வரியைப் பொறுத்தவரை உ.பி.,யில் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு 8 சதவீதமும்; 10 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு 10 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.
பொதுவாக, ஸ்ட்ராங் ஹைபிரிட் மின்சார வாகனங்கள் என்பது, குறுகிய தொலைவை முற்றிலும் மின்சார சக்தியிலும், நெடுந்துார பயணங்களை மின்சார சக்தி மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டின் வாயிலாகவும் கடக்கும்.
மாறாக, பிளக் - இன் ஹைபிரிட் மின்சார வாகனங்கள், எவ்வளவு தொலைவாக இருந்தாலும், மின்சார சக்தியையே முதன்மையாக பயன்படுத்தும்.
நம் நாட்டின் பயணியர் வாகன விற்பனையில், உ.பி., முக்கிய பங்கு வகிக்கிறது.
வாகன விற்பனையாளர் கூட்டமைப்பான 'படா'வின் தரவுகளின்படி, நடப்பாண்டின் முதல் பாதியில், மாநிலத்தில் 2.36 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 13.46 சதவீதம் அதிகமாகும்.இதுமட்டுமல்லாமல்; காலாண்டு வாரியாக பார்க்கும்போதும், மாநிலத்தின் பயணியர் வாகன விற்பனை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஜூன் காலாண்டில் 10.26 சதவீதம் அதிகரித்து உள்ளது.
சிறப்பான முடிவு
உ.பி., அரசின் இந்த முடிவு சிறப்பானது என்றும்; இது மக்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என்றும், வாகனத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றும்பட்சத்தில், தற்போது மந்தமாக உள்ள வாகன விற்பனை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உ.பி., அரசின் இந்த முடிவு, 'மாருதி சுசூகி, ஹோண்டா, டொயோட்டா கிர்லோஸ்கர்' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிகம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் இந்த தள்ளுபடியால், கார் வாங்குபவர்கள் 1.50 - 3.50 லட்சம் ரூபாய் வரை பயனடைவர்.