ரயில்களை தாமதமின்றி இயக்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
ரயில்களை தாமதமின்றி இயக்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
ரயில்களை தாமதமின்றி இயக்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 01:07 AM
சென்னை:'பயணியர் ரயில்களை, 100 சதவீதம் சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார்.
ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், தாமதம் இன்றி இயக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில் பாதைகள் மேம்பாடு, கூடுதல் பாதைகள் அமைப்பது, நவீன சிக்னல் தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால், 16 ரயில்வே மண்டலங்களிலும் சரியான நேரத்தில் ரயில்களை இயக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் ரயில்கள், 91.6 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மண்டல பொது மேலாளர்களுடன் காணொலி வாயிலாக, நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மண்டல வாரியாக ரயில்கள் இயக்கம், பயணியர் புகார்கள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து கேட்டறிந்தார்.
'அனைத்து ரயில்களையும் குறித்த நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பயணியர் ரயில்களை, 100 சதவீதம் சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொது மேலாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில்வேயில் புதிய கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில்களின் இயக்கத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரயில்களை தாமதம் இன்றி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.