பாட்டிலில் ஆவின் பால் ஆராய தீர்ப்பாயம் உத்தரவு
பாட்டிலில் ஆவின் பால் ஆராய தீர்ப்பாயம் உத்தரவு
பாட்டிலில் ஆவின் பால் ஆராய தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜூலை 10, 2024 01:06 AM
சென்னை:மறுசுழற்சி பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பாட்டிலில், ஆவின் பால் விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு, ஆவின் நிறுவனத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள், டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன.
மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்ய, எந்த ஏற்பாட்டையும் ஆவின் நிறுவனம் செய்யவில்லை.
பிளாஸ்டிக் பைகளை துாக்கி எறிவதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, மனிதர்கள், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கண்ணாடி பாட்டில்கள் அல்லது, 'டெட்ரா பாக்கெட்'களில் விற்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மீண்டும் பயன்படுத்த கூடிய அல்லது மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில் அல்லது கண்ணாடி பாட்டிலில், ஆவின் பாலை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆவின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நுகர்வோருக்கு பால் வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, ஆவின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை ஆகஸ்ட், 20ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.