வந்தாரை வாழ வைக்கும் திருச்சி தொகுதி
வந்தாரை வாழ வைக்கும் திருச்சி தொகுதி
வந்தாரை வாழ வைக்கும் திருச்சி தொகுதி
ADDED : ஜூன் 06, 2024 07:07 PM
திருச்சி:திருச்சி லோக்சபா தொகுதியில் தொடர்ந்து வெளியூரைச் சேர்ந்தவர்களே எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவதால், வந்தாரை வாழ வைக்கும் தொகுதியாக திருச்சி மாறியுள்ளது.
திருச்சி லோக்சபா தொகுதியில் கடந்த, 1962ம் ஆண்டு முதல், 1980ம் ஆண்டு வரை, இந்திய பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த ஆனந்தநம்பியார், கல்யாணசுந்தரம் ஆகியோர் எம்.பி.,க்களாக இருந்தனர். இவர்கள் ஆனந்த நம்பியார் கேரளாவைச் சேர்ந்தவர். கல்யாணசுந்தரம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதன்பின், 1980ல் தி.மு.க., சார்பில் திருச்சியைச் சேர்ந்த செல்வராஜ் எம்.பி.,யானார். பின், 1984ம் ஆண்டு முதல் காங்., கட்சியைச் சேர்ந்த அடைக்கலராஜ், 1998ம் ஆண்டு வரை தொடர்ந்து எம்.பி.,யாக இருந்தார். அதன்பின், 1998ல், சேலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், பா.ஜ., சார்பில் திருச்சி தொகுதி எம்.பி.,யாக தேர்வானார். அதன்பின் தொடர்ந்து, வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து திருச்சி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 1998ம் ஆண்டைத் தொடர்ந்து, 1999லும் எம்.பி.,யாக தேர்வானார்.
ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்ததால், 2001ல் நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் தலித் எழில்மலை வெற்றி பெற்று எம்.பி.,யானார். இவரும் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2004ல் ம.தி.மு.க., சார்பில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த எல்.கணேசன் எம்.பி.,யானார். 2009 மற்றும் 2014ம் ஆண்டில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குமார், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் காங்., சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யானார். 2024ம் ஆண்டு, தற்போது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வைகோ மகன் துரை, ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம், திருச்சி லோக்சபா தொகுதியில் கடந்த, 1998ம் ஆண்டு முதல், தொடர்ந்து, வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களே எம்.பி.,யாக உள்ளனர். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எம்.பி.,யாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்மூலம் வந்தாரை வாழ வைக்கும் தொகுதியாக திருச்சி மாறியுள்ளது.