இன்றும், நாளையும் கனமழை இருக்காது இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசும்
இன்றும், நாளையும் கனமழை இருக்காது இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசும்
இன்றும், நாளையும் கனமழை இருக்காது இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசும்
ADDED : ஜூன் 04, 2024 12:59 AM
சென்னை: 'தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பில்லை' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. மாநிலம் முழுதும், 90க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
பெரியகுளம் 9; கோபி செட்டிப்பாளையம், பெரியகுளம், கமுதி 7; மாரண்டஹள்ளி, அவினாசி, நம்பியூர் 6; மேட்டுப்பாளையம், முசிறி, சோத்துப்பாறை, ஆத்துார், கடலுார், காரியாப்பட்டி, விழுப்புரம், அரியலுார் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
ஆந்திராவின் தெற்கு கடலோரம் மற்றும் அதையொட்டிய தமிழக வடக்கு கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், இன்று முற்பகல் வரையில் கனமழை பெய்யும்.
இன்று பிற்பகல் முதல் நாளை வரை, தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் மாவட்ட கடலோர பகுதிகள், கேரளா, கர்நாடகா கடலோரம், லட்சத்தீவு, தெற்கு வங்கக்கடல், அதையொட்டிய மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், வரும் 7ம் தேதி வரை, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.
எனவே, மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.