திருப்புல்லாணி கோவில் நகைகள் மாயம் அறநிலையத்துறை அறிக்கை தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்புல்லாணி கோவில் நகைகள் மாயம் அறநிலையத்துறை அறிக்கை தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்புல்லாணி கோவில் நகைகள் மாயம் அறநிலையத்துறை அறிக்கை தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 09, 2024 07:58 PM
மதுரை:ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நகைககள் மாயமான விவகாரத்தில் இக்கோவில் மட்டுமன்றி பிற கோவில்களில் சமஸ்தானம் நகைகளை பராமரிக்கும் விதம் குறித்து, அறநிலையத்துறை துணை கமிஷனர் அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இக்கோவிலில் ஆதி ஜெகநாத பெருமாள், பத்மாசனி தாயாருக்கு அணிவிப்பதற்கான மொத்த நகைகளில், 952 கிராம் எடையுள்ள 30 தங்க நகைகள், 1199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகள் மாயமாகின. இதன் மதிப்பு 1 கோடி ரூபாய்.
தற்போதைய திவான் பழனிவேல் பாண்டியன், ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். கோவில் அர்ச்சகர்/ ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்கு பதியப்பட்டது. அவரது முன்ஜாமின் மனுவை ராமநாதபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர், 'சம்பவத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி: நகைகள், அதற்கான கணக்குகளை சமஸ்தானம் முறையாக பராமரிக்கவில்லை. நகைகள் காணாமல் போனதற்காக மனுதாரர் பலிகடா ஆக்கப்பட்டாரா என்ற சந்தேகம் நீதிமன்றத்திற்கு உள்ளது. மனுதாரர் வீட்டில் சோதனை நடத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
நகைகள் எந்த வகையில் பராமரிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தவில்லை. தற்போதைய விசாரணை அதிகாரி உண்மையை கண்டறிய சரியான முறையில் விசாரிக்கவில்லை. இதில் முடிவெடுக்க சில உண்மைகள் தேவை.
சிவகங்கை அறநிலையத்துறை துணை கமிஷனர் சங்கர் இக்கோவில் மட்டுமின்றி, பிற கோவில்களில் ராமநாதபுரம் சமஸ்தானம் மூலம் நகைகளை பராமரிக்கும் விதம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நகைகள் காணாமல் போனது மற்றும் அதன் விபரம் குறித்து பரம்பரை அறங்காவலரிடம் மனுதாரர் தெரிவித்ததற்கு சான்று உள்ளதா என்பது குறித்தும் ஜூலை 11ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.