/உள்ளூர் செய்திகள்/சேலம்/ என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கல்வராயன்மலை மாணவி அசத்தல் என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கல்வராயன்மலை மாணவி அசத்தல்
என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கல்வராயன்மலை மாணவி அசத்தல்
என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கல்வராயன்மலை மாணவி அசத்தல்
என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கல்வராயன்மலை மாணவி அசத்தல்
ADDED : ஜூலை 09, 2024 07:59 PM

சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன்மலை, மேல்நாடு ஊராட்சி, வேலம்பட்டை சேர்ந்த, பழங்குடியின மாணவி சுகன்யா, 17. இவரது அண்ணன் பூபதி, 23. இவர்களது தாய் ராசம்மாள், 14 ஆண்டுகளுக்கு முன், மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து, தந்தை பூசான், மகன், மகளை விட்டு சென்று விட்டார். இதனால் பெரியப்பா லட்சுமணன், பெரியம்மாள் சின்னபொன்னு ஆகியோர், சுகன்யா, பூபதியை வளர்த்து வருகின்றனர்.
சுகன்யா, கரியகோவில் அரசு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் கணித உயிரியியல் படித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 412 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுதி, பழங்குடி இட ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றார். நேற்று முன்தினம் கவுன்சிலிங் மூலம், திருச்சி என்.ஐ.டி.,யில் உற்பத்தி பொறியியல் படிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்.
இதுகுறித்து சுகன்யா கூறியதாவது:
கல்வி மீது இருந்த ஆர்வத்தால் தினமும், 3 கி.மீ., நடந்து சென்று கரியகோவில் பள்ளியில் படித்தேன். மருத்துவர் என்பது கனவாக இருந்த நிலையில் வளர்ப்பு பெற்றோர் பெயரில் பழங்குடி ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை. பிளஸ் 2 தேர்வு எழுதும் முன் கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அப்போதைய ஆத்துார் ஆர்.டி.ஓ., சரண்யா ஆய்வு செய்து ஜாதி சான்றிதழ் வழங்கினார்.
தாமதமாக கிடைத்ததால், நீட் தேர்வு எழுத முடியவில்லை. ஜே.இ.இ., தேர்வு எழுதி, 84 சதவீத மதிப்பெண் பெற்றதால், திருச்சி என்.ஐ.டி.,யில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. என் வளர்ப்பு பெற்றோர், சகோதரர், ஆசிரியர்கள் ஊக்கத்தால், இந்த வாய்ப்பை பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -