'எலாஸ்டிக்' தர பரிசோதனை வசதி திருப்பூர் தொழில் துறை எதிர்பார்ப்பு
'எலாஸ்டிக்' தர பரிசோதனை வசதி திருப்பூர் தொழில் துறை எதிர்பார்ப்பு
'எலாஸ்டிக்' தர பரிசோதனை வசதி திருப்பூர் தொழில் துறை எதிர்பார்ப்பு
ADDED : மார் 13, 2025 01:05 AM

திருப்பூர்:திருப்பூரில் எலாஸ்டிக் தரப் பரிசோதனைக்கு போதிய ஆய்வக வசதி இல்லாததால், 'டெக்ஸ்டைல் கமிட்டி' ஆய்வகத்தில் அதற்கான வசதியை செய்து கொடுக்க வேண்டுமென, எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மதிப்பு கூட்டப்பட்ட பின்னலாடைகள் உற்பத்தியில், எலாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க இயலாதது. இந்தியாவில் எலாஸ்டிக் தயாரிப்புக்கான ரப்பர் உற்பத்தி குறைவு என்பதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
ஆடைகளில் பயன்படுத்தப்படும் எலாஸ்டிக்கின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று, வெளிநாட்டு வர்த்தகர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். 'சாம்பிள்' எலாஸ்டிக் தயாரிக்கப்பட்டதும், அதை ஆய்வுக்கு உட்படுத்தி, சான்றிதழ் பெற்று, வர்த்தகர்களிடம் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வக சான்று தேவையானபட்சத்தில், கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் (சிட்ரா) சென்று ஆய்வு செய்ய வேண்டிய சூழலே உள்ளது.
இது குறித்து, எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:
எலாஸ்டிக் உற்பத்தி சார்ந்த விபரங்களை கேட்டறிய, டெக்ஸ்டைல் கமிட்டியின் துணை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள கவுரி சங்கர், திருப்பூருக்கு வந்து, எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டார். அவருடன் நடந்த ஆலோசனையின் போது, எலாஸ்டிக் டெஸ்டிங் தொடர்பாக கோரிக்கை வைத்தோம்.
திருப்பூரிலேயே பரிசோதனை செய்து, அதனடிப்படையில் எலாஸ்டிக் தரச்சான்று வழங்க முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துஉள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.