'சாம்பிள்' ஏற்றுமதியில் சலுகை ஜவுளி துறையினர் மகிழ்ச்சி
'சாம்பிள்' ஏற்றுமதியில் சலுகை ஜவுளி துறையினர் மகிழ்ச்சி
'சாம்பிள்' ஏற்றுமதியில் சலுகை ஜவுளி துறையினர் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 28, 2024 12:11 AM

திருப்பூர்:நேரடி முதலீட்டு விதிமுறையில் தளர்வு அறிவித்துள்ளதால், இந்திய ரூபாய் மதிப்பில், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக, ஏ.இ.பி.சி., தெரிவித்து உள்ளது.
மத்திய பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., சார்பில், டில்லியில் கலந்தாய்வு நடைபெற்றது.
இது குறித்து ஏ.இ.பி.சி., செயலர் மிதிலேஸ்வர் தாக்கூர் அறிக்கை:
ஏற்றுமதி ஆர்டரின் மீதான, 'சாம்பிள்' சரக்கு ஏற்றுமதியில், 1 லட்சம் ரூபாய் வரை, வரி விலக்கு அமலில் இருந்தது. இது, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்த்த, 'ஏ - டப்' என்ற திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு திட்ட நிதி ஒதுக்கீடு, 675 கோடியாக இருந்தது; 635 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க ஏதுவாக, பருத்தி கொள்முதல் செய்து விற்பனை செய்ய ஏதுவாக, இந்திய பருத்திக்கழகம், 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 100 கோடி ரூபாய் வரை பிணையில்லா கடன் பெறும் திட்டம், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதற்கான விதிமுறைகளில், தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு முதலீடு அதிகரிக்கும். குறிப்பாக, ரூபாய் மதிப்பின் அடிப்படையில் முதலீடு செய்வதும் அதிகரிக்கும்.
ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்காக, 13 வகை மூலப்பொருள் மற்றும் உற்பத்திக்கான உதிரிப்பொருள் இறக்குமதிக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளி முதன்முறையாக வேலைக்கு வரும் போது, முதல் மாத சம்பளத்தை அரசு மானியமாக ஒதுக்கும் திட்டத்தால் பயனடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.