நிர்வாகிகள் மூவர் பதவி பறிப்பு; தமிழக பா.ஜ.,வில் அதிரடி
நிர்வாகிகள் மூவர் பதவி பறிப்பு; தமிழக பா.ஜ.,வில் அதிரடி
நிர்வாகிகள் மூவர் பதவி பறிப்பு; தமிழக பா.ஜ.,வில் அதிரடி
ADDED : ஜூன் 24, 2024 06:39 AM

சென்னை : போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள் இருவர் உட்பட, மூன்று பேரின் கட்சி பதவிகளை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிரடியாக நேற்று பறித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., ஓட்டுகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையிலும், அக்கட்சியின் தோல்விக்கு சுயபரிசோதனை செய்யும் பணிகளில், மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, லோக்பா தேர்தலுக்கு பின் கட்சியில் புது ரத்தம் பாய்ச்சவும், களையெடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் மாநில பொதுச்செயலர் திருச்சி சூர்யா மற்றும் மூத்த நிர்வாகி கல்யாணராமன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்த அண்ணாமலை, மூன்று மாவட்ட நிர்வாகிகளின் கட்சி பதவியை பறித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'திருவாரூர் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து பாஸ்கர்; மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து அகோரம்; திருவாரூர் மாவட்ட பொதுச்செயலர் பதவியில் இருந்து செந்திலரசன் ஆகிய மூவரும் உடனே விடுவிக்கப்படுகின்றனர்' என, கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன், பா.ஜ, விவசாய அணியின் திருவாரூர் மாவட்ட முன்னாள் தலைவர் மதுசூதனனோடு பாஸ்கருக்கு இருந்த முன் விரோதத்தில், மதுசூதனனை சிலருடன் சேர்ந்து பாஸ்கர் வெட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடப்போவதாக மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் அகோரம். இது கட்சிக்கு அவப்பெயர் என்பதால், மூவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.