சில்மிஷ சிறுவனால் தாமதமாக கிளம்பிய விமானம்
சில்மிஷ சிறுவனால் தாமதமாக கிளம்பிய விமானம்
சில்மிஷ சிறுவனால் தாமதமாக கிளம்பிய விமானம்
ADDED : ஜூன் 12, 2024 12:41 AM
சென்னை:அவசரகால பட்டனை அழுத்த முயன்ற சிறுவனால், விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, கோல்கட்டா செல்லும், 'இண்டிகோ' விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஓடுபாதையில் ஓட தயாராகும்போது, விமானியின் கேபின் பகுதியில், அவசர கால கதவு திறப்பதற்கான அலாரம் ஒலித்தது.
இதையடுத்து, என்ன நடக்கிறது; யார் அவசர கால கதவை திறக்க முயன்றது என, விமான பணிப்பெண்களிடம் விமானி விசாரித்தார்.
பணிப்பெண்கள் சென்று பார்த்தபோது, அவசர கால கதவு பகுதியில் பெற்றோருடன், 17 வயது சிறுவன் இருந்தார். அவசர கால கதவை திறக்கும் இடத்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை, அவர் விளையாட்டாக கிழித்ததால், அலாரம் ஒலித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவன் மற்றும் பெற்றோரை விமானிகள் கண்டித்தனர். 'முதல் முறை சிறுவன் விமானத்தில் பயணிப்பதால், இது போன்று தவறுதலாக நடந்துவிட்டது; இனி அதுபோன்று நடக்காது; நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்' என, விமானியிடம், பெற்றோர் உறுதி அளித்தனர். மன்னிப்பு கடிதமும் எழுதித் தந்தனர்.
பின், அவசரகால கதவின் கிழிந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டு, புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சிறுவனும், அவரது பெற்றோரின் இருக்கையும் இடம் மாற்றப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.