மாவட்ட செயலாளர்களின் திட்டமிட்ட பணி சவாலில் வென்று வெற்றி வாகை சூடிய தி.மு.க.,
மாவட்ட செயலாளர்களின் திட்டமிட்ட பணி சவாலில் வென்று வெற்றி வாகை சூடிய தி.மு.க.,
மாவட்ட செயலாளர்களின் திட்டமிட்ட பணி சவாலில் வென்று வெற்றி வாகை சூடிய தி.மு.க.,
ADDED : ஜூன் 05, 2024 12:27 AM

கள்ளக்குறிச்சி தொகுதியில் திட்டமிட்ட களப்பணியும் தேர்தல் முடியும் வரை மாவட்ட செயலாளர்கள் அளித்த உற்சாகத்தால் சவாலில் வென்று தி.மு.க., வெற்றி வாகை சூடியது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் வெற்றி பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளரான இவருக்கு அமைச்சர் வேலுவின் பரிந்துரையால் சீட் கிடைத்தது. கள்ளக்குறிச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன் பேசுகையில், அ.தி.மு.க.,வில் யார் போட்டியிட்டாலும் அவர்களை தோற்கடிப்பேன். அது நடக்கவில்லையெனில் தனது மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன் என, சவால் விடுத்தார்.
இந்த சவாலுக்கு பதிலடி தரும் வகையில் அ.தி.மு.க., வேட்பாளராக மாவட்ட செயலாளர் குமரகுரு அறிவிக்கப்பட்டதும் போட்டி கடுமையானது. இதையடுத்து வசந்தம் கார்த்திகேயன் தான் விடுத்த சவாலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்போடு தேர்தல் வெற்றிக்கான வியூகத்தை திட்டமிட்டார்.
ஜாதி சங்கங்கள், ரசிகர் மன்றங்கள், ஆன்மிக அமைப்புகள் என, அனைத்து குழுவினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு தடபுடல் கவனிப்புடன் தாராளம் காட்டி அவர்களை கடைசி வரை உற்சாகமாக வைத்திருந்தார். கட்சியினரை ஒருங்கிணைத்து களப்பணியில் ஈடுபடுத்த மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், சிவலிங்கம் ஆகியோர் தீவிரமாக பணியாற்றினர்.
கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சர் வேலு, சேலம் பொறுப்பு அமைச்சர் நேரு ஆகியோர் தொகுதியில் அதிகம் கவனம் செலுத்தாத போதும், 3 மாவட்ட செயலாளர்களின் ஊக்குவிப்பு கட்சியினரை உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டது.
கட்சி வேட்பாளர் வெற்றி பெறவில்லை என்றால் நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து நிர்வாகிகள் தங்கள் பகுதியில் ஓட்டுக்கள் குறையக்கூடாது என தீவிர களப்பணியாற்றினர். அதேபோல் வாக்காளர்கள் ஓட்டு போடும் வரை அவர்களை தொடர்ந்து தங்களின் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
அந்தந்த பகுதி நிர்வாகிகளும் தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்களின் சொந்தப் பணத்தை செலவிட்டு தேர்தல் பணியாற்றியதால், தி.மு.க.,விற்கு கடைசி நேரத்தில் கூடுதல் ஓட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. தேர்தல் நெருக்கத்தில் பல்வேறு கருத்துக்கணிப்புகளின்படி கள்ளக்குறிச்சி தொகுதி நிலவரம் இழுபறியாக இருக்கிறது என்பதை அறிந்து தி.மு.க., வினர் தங்களின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள இறுதிக்கட்டம் வரை சோர்வடையாமல் தீவிரமாக களப்பணியாற்றினர்.
இதனால் சவாலில் வெற்றி பெற்று தி.மு.க., வேட்பாளர் மலையரசன் வாகை சூடியுள்ளார்
- நமது நிருபர்-.