Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும் கல்வி காலண்டர்: ஆசிரியர்கள் மாணவர்கள் அதிருப்தி

உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும் கல்வி காலண்டர்: ஆசிரியர்கள் மாணவர்கள் அதிருப்தி

உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும் கல்வி காலண்டர்: ஆசிரியர்கள் மாணவர்கள் அதிருப்தி

உளவியல் நெருக்கடியை ஏற்படுத்தும் கல்வி காலண்டர்: ஆசிரியர்கள் மாணவர்கள் அதிருப்தி

ADDED : ஜூன் 11, 2024 05:58 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை: 'கல்வித்துறை வெளியிட்டுள்ள நடப்பு கல்வியாண்டிற்கான வேலை, விடுமுறை நாட்கள் குறித்த உத்தேச கால அட்டவணை (காலண்டர்) ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உளவியல் ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தும்' என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த கால அட்டவணையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கான பொதுத் தேர்வு தேதிகள் இல்லாதது உள்ளிட்ட சில மாற்றங்கள் இருந்தாலும் ஆசிரியர்கள், மாணவர்களை மறைமுகமாக பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆசிரியர்களுக்கு எதிராக இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 19 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கல்வியாண்டில் ஜூன் 3க்கு பதில் 10ல் அதாவது 5 வேலை நாட்கள் தள்ளி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேநேரம் ஏப்., 17 பள்ளி கடைசி வேலை நாள் எனக் கூறிவிட்டு, நிர்வாக காரணங்கள் என குறிப்பிட்டு ஏப்., 28 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இது ஆசிரியர்களை பழிவாங்கும் செயலாக கருதுகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக மே முழுவதும் ஏதாவது வேலை எனக் கூறி ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் பிற அரசு ஊழியர்களை போல் ஆசிரியர்களுக்கும் 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்க அரசு முன்வருமா.

மேலும், ஆறு முதல் எட்டு மற்றும் ஒன்பது முதல் பிளஸ் 2 என தனித்தனியாக காலஅட்டவணையை அறிவித்துள்ளது. இதில் 'அறு முதல் 10ம் வகுப்பு வரை முதல்பாட வேளை தமிழ் கற்பிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. 99 சதவீதம் உயர்நிலை பள்ளிகளில் 5 ஆசிரியர்களே உள்ளனர். அதில் தமிழாசிரியர் ஒருவர். அவர் அனைத்து வகுப்புகளுக்கும் (ஆறு முதல் 10 வரை) முதல் பாடவேளையாக தமிழ் பாடம் எவ்வாறு கற்பிக்க முடியும்.

புதிய அட்டவணையில் நாள் ஒன்றுக்கு ஒரு வகுப்புக்கு 8 பாடவேளைகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாரத்தில் 40 பாடவேளைகள் வருகின்றன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் 5 ஆசிரியர்களே உள்ளனர். அவர்கள் 'ரெஸ்ட் பீரியடு' இன்றி நடத்த முடியுமா. இதுவரை வாரம் 28 பாடவேளை தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கல்விசார், கல்விசாராத செயல்பாடுகள் என தனித்தனியே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி சாரா செயல்பாடுகளுக்கான ஆசிரியர்கள் யார் என குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதலாக 19 சனிக்கிழமைகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது என்பது கூடுதல் கற்றல் நாட்களை அவர்கள் பெற்றனர் என்ற புள்ளி விவரத்திற்கு மட்டும் தான் பயன்படும்.

அதுபோல் '5 கற்பித்தல் நாட்கள், 2 விடுமுறை நாட்கள்' என்பதில் அந்த 2 நாட்களிலும் அவர்கள் பொழுதை வெறுமனே கழிப்பதில்லை. அடுத்த 5 நாட்களுக்கான திட்டமிடல்களை தயார் செய்கின்றனர். திட்டமிடல் நாட்களை குறைப்பது போன்ற நெருக்கடிகள் உளவியல் ரீதியாக ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாதிக்கும். இதன் விளைவு தேர்வு முடிவுகளில் தெரியும் என்றனர்.

கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இது உத்தேச காலண்டர் தான். இதுகுறித்து கருத்துக்கள், ஆலோசனைகளை msectndse@gmail.com என்ற இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us