சில மணி நேரம் மழைக்கே தமிழக மின் தேவை சரிவு
சில மணி நேரம் மழைக்கே தமிழக மின் தேவை சரிவு
சில மணி நேரம் மழைக்கே தமிழக மின் தேவை சரிவு
ADDED : மார் 12, 2025 05:54 AM
சென்னை: தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. வீடு, அலுவலகங்களில், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகரித்ததால், கடந்த மாதம் வரை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக இருந்த மின் தேவை, கடந்த வாரத்தில் 18,000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்தது.
நேற்று காலையில் இருந்து, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் திடீரென மழை பெய்தது. சென்னையில் காலை முதல் வெயில் குறைந்திருந்த நிலையில், பகல் 12:45 மணி முதல், எழும்பூர், அண்ணா சாலை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
அரை மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதனால், நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி, 17,500 மெகா வாட்டாக இருந்த மின் தேவை, பகல் 1:00 மணிக்கு 15,000 மெகா வாட்டாக குறைந்தது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், இம்மாதம் எதிர்பார்த்ததை விட மின் தேவை அதிகரித்து வந்தது.
'இந்தச் சூழலில், சில மணி நேரம் பெய்த மழைக்கே, மின் தேவை 2,500 மெகா வாட் குறைந்தது. சில நாட்களுக்கு மழை நீடித்தால், மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் இருக்காது' என்றார்.